``பாடப் போனா, எனக்குப் பொண்ணு பார்த்துட்டாக!" ஆந்தக்குடி இளையராஜா | My Marriage function was just another accident, says Ilayaraja

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (05/11/2018)

கடைசி தொடர்பு:18:35 (05/11/2018)

``பாடப் போனா, எனக்குப் பொண்ணு பார்த்துட்டாக!" ஆந்தக்குடி இளையராஜா

``பாடப் போனா, எனக்குப் பொண்ணு பார்த்துட்டாக!

காரைக்குடி சுற்றுவட்டாரம் மட்டுமல்ல, தமிழகம் எங்கும் தன் பாட்டுகளால் கொடிக்கட்டிப் பறக்கிறார் இளையகானம் இளையராஜா. இவர் பாடிய `அத்தமக ஒன்ன நெனைச்சு...' பாடல் யூ டியூபில் வைரல் ஹிட். இதுவரை 13 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது என்றால் சும்மாவா? திரைப்படங்களில் பாடிக்கொண்டிருக்கும் அவரைத் தேடி காரைக்குடிச் சென்றோம். நாற்றங்கால் இளம்பயிரின் வாசம், தென்னம் மரக்காற்று, பம்பு செட் நீரின் குளிர்ச்சி என அந்த இடமே உற்சாகமாக நம்மை வரவேற்றது. ஆந்தக்குடி இளையராஜா என்றால் அந்த வட்டாரத்தில் எல்லோருக்கும் தெரிகிறது. 

``ஆந்தக்குடி என்பது உங்கள் ஊரின் பெயரா?"

``ஆமா, எங்க கிராமத்துப் பெயரோடு இருப்பது நல்லா இருக்குல. அது நமக்கான அடையாளமும்தானே. சின்ன வயசுல திருவிழாவில வாங்குன பாட்டுப்புத்தகங்கள்தான் எனக்குப் பொழுதுபோக்கு. அந்தப் பாட்டெல்லாம் பாடிட்டே இருப்பேன். ஊர்க்காரங்களுக்கும் அது ரொம்பப் பிடிக்கும். கூட சுத்துற பசங்களும் பாடச் சொல்லி, கேட்டுட்டே இருப்பாங்க. நான் பாடுறது அப்பாவுக்கும் பிடிக்கும். அதனால, கோயில் திருவிழா நாடகத்துல நான் ஒரே ஒரு பாட்டுப் பாடுறதுக்கு வாய்ப்பு வாங்கித் தந்தார்."

``அப்பாவும் பாடகரா... இல்லை, மகனைப் பாடகனாக்கும் ஆசையா?"

``மாடு மேய்க்கிறப்ப, வயல் வேல செய்யறப்ப பாடிட்டே இருப்பாரு அப்பா. இப்போ யோசிச்சுப் பார்த்தா, சுதி சுத்தமா பாடியிருக்காருன்னு தோணும். அவருக்கு இயல்பா கிடைச்ச வரம், பாட்டு. அதுல கொஞ்சத்தை எனக்குக் கொடுத்திருக்காரு. அவரோட ஆசையைத்தான் நான் ஊர் ஊராப் போய் பாடிட்டு இருக்கேன்.''

இளையராஜா

``இந்தப் பகுதி திருவிழாக்கள் உங்கள் கலை நிகழ்ச்சி இல்லாமல் நடப்பதில்லை என்கிறார்களே..?!" 

``கிட்டத்தட்ட 18 வருஷப் போராட்டம்! ஆரம்பத்துல, `அவர் பாடினா நான் பாடமாட்டேன்'னு என்னை விலக்கிவிட்ட அனுபவங்களும், கஷ்டங்களும் நிறைய பாத்தேன். இன்னிக்கு, கேட்கிறவங்களுக்குத் தேதி கொடுக்கிறதுக்குச் சிரமப்படற அளவுக்கு ஆனதுக்கு எங்க குழுவுக்கு முக்கியமான பங்கிருக்கு. திருவாரூர் பக்கத்துல ஒரு ஊர்ல, நிகழ்ச்சி முடிஞ்சதும், என்னைக் கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய், `உன்னைப் பார்த்தா நல்ல பையனாத் தெரியுற. எங்க ஊர்ல டீச்சருக்கு படிச்ச ஒரு பொண்ணு இருக்கு. அதான் கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்னு நினைக்கிறோம்'னு சொல்ல, நான் எனக்கு ஏற்கெனவே கல்யாணமாயிட்டதைச் சொன்னேன். அடுத்த நிமிஷம் எல்லாரும் சிரிச்சுட்டாங்க. என்னை அவங்க வீட்டுல ஒருத்தனா நெனைக்க வெச்சது எம் பாட்டுகதான்." 

`` `அத்த மக பாட்டு' இவ்வளவு ஃபேமஸாகும்னு நினைத்தீர்களா?"

``ஒரு ஆல்பம் ரெடி பண்ணலாம்னு நினைச்சப்ப, கிராமங்கள்ல அத்த மக, அக்கா மகன்னு சொல்லிதானே பேசிப்பாங்க. அதையே வெச்சுப் பாட்டு எழுதலாம்னு முடிவெடுத்தோம். தஞ்சாவூர் ராசி மணிவாசகம் ரொம்ப அருமையா எழுதித்தந்தாரு. அது இவ்வளவு ஹிட்டாகும்னு நினைக்கல. இது மட்டுமல்ல, என்னோடு ஒவ்வொரு வெற்றிக்கும் என் குழுவைச் சேர்ந்தவங்கதான் முழுக் காரணம்." 

``மறக்க முடியாத பரிசு..?"

``கீரனூர் பக்கத்துல கிள்ளுக்கோட்டை கிராமத்துல, `ஆக்காட்டி, ஆக்காட்டி' என்ற நாட்டுப்புறப் பாட்டைப் பாடுனோம். அது, வலையில சிக்கிக்கிட்ட தாய்ப்பறவையோட கண்ணீரைச் சொல்ற பாட்டு. அதை நான் பாடினதைக் கேட்டுக்கிட்டிருந்த நரிக்குறவர்கள், அழுதபடியே மேடைக்கு வந்து அவங்களோட பாசி மணி மாலையை எனக்குப் போட்டுவிட்டாங்க. அந்தப் பொக்கிஷத்தை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன்! அதை விட பெரிய பரிசு என்ன கிடைக்கப் போகுது சொல்லுங்க?"


டிரெண்டிங் @ விகடன்