வெளியிடப்பட்ட நேரம்: 12:57 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:57 (05/11/2018)

`அடித்தால் இருபதுதான்; எட்டு அல்ல!'- ஏர்போர்ட்டில் அதிர்ந்த ஓ.பன்னீர்செல்வம்

``எட்டுத் தொகுதிகளில் வெற்றிப்பெற்றால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்'' என்று முதல்வர் பழனிசாமி பேசியிருந்தார்கள். இதற்கு விளக்கம் அளித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ``நாம் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தைத்தான் பதிவு செய்தாரே, நான்கோ எட்டோ பன்னிரெண்டோ இல்லை. இருபதுதான் என்று பேசினார்" என்று அதிரடியாகக் கூறினார்.

ஓ பன்னீர்செல்வம்

சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

மதுரையில் மு.க.ஸ்டாலினும் டி.டி.வி.தினரகனும் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுவது உண்மையா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் டி.டி.வி.தினகரனும் பல தடவை சந்தித்துப் பேசியிருப்பதாக தகவல் எங்களுக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.  

முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், அமைச்சர் கடம்பூர் ராஜூதான் டி.டி.வி.தினகரனின் சிலீப்பர் செல் என்று கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

அது பற்றிய முழுவிவரமும் இருதரப்பினரிடமிருந்து கேட்கப்பட்டுள்ளது.

கட்சிதான் அ.தி.மு.க.விடம் இருக்கிறது. உயிரோட்டமான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதாக டி.டி.வி.தினகரன் தரப்பினர் கூறியிருப்பது பற்றி?

திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் விரைவில் வரயிருக்கிறது. இதையொட்டி அ.தி.மு.க சார்பாக 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பொறுப்பாளர்கள் முழுமையாக அடிப்படை பூர்வாங்கப் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். உறுதியாக 20 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க உறுதியாக வெற்றி பெறும்.
 

குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெறால்தான் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று முதல்வர் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சால் அ.தி.மு.க நம்பிக்கை இழந்துவிட்டதா?

எந்தச் சூழ்நிலையிலும் முதல்வர், 8 தொகுதி 4 தொகுதி 6 தொகுதி என்று பேசவில்லை. முழுமையாக அ.தி.மு.க தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன 20 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறுவதற்காக வழிவகைகளை அடிப்படை பூர்வாங்கன் பணிகளை கட்சியின் பொறுப்பாளர்கள் முன்னின்று நடத்திட வேண்டும். உறுதியாக நாம் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்தைத்தான் பதிவு செய்தாரே தவிர நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சொல்கின்றன மனக்கணக்காக நான்கோ எட்டோ பனிரெண்டோ இல்லை.

கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தீர்கள். இதுவரை டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து யாருமே வரவில்லையே?

அழைப்பு விடுப்பது எங்களது பெருந்தன்மை. அதை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர்களுடைய மனநிலை.  

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி அமைத்துப்போட்டியிடுமா, தனித்து போட்டியிடுமா?

எந்தச் சூழ்நிலையிலும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் அ.தி.மு.க. தனித்து நின்றுதான் போட்டியிடும் என்ற முடிவினை ஏற்கெனவே ஜெயலலிதா எடுத்திருக்கிறார். ஒத்தக்கருத்தோடு எங்கள் கொள்கையோடு இணைந்து வருகிற கட்சிகள் வந்தால் அவர்களை இணைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அரசு எடுத்துள்ள முன்னேற்பாடு என்ன?

ஏற்கெனவே தென்மேற்குப் பருவமழையை எதிர்நோக்கி அது சராசரிக்கு மிகுதியாகப் பெய்தால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்கும் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லாதபடி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பு அதிகமாக இருக்குமானால் அதையும் எதிர்கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.