வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:13:30 (05/11/2018)

`இனி ஒவ்வொரு இரவும் பயம்தான்!' - தீபாவளி கொண்டாட கும்கி யானைகள் சென்றதால் விவசாயிகள் வேதனை

விவசாய நிலங்களுக்குள் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க வரவழைக்கப்பட்ட இரண்டு கும்கி யானைகள், தீபாவளி கொண்டாட தங்களது முகாமுக்குத் திரும்பியுள்ளன.

கும்கி யானைகள்

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையைப் பிடிக்க, வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், கடந்த மாதம் டாப்சிலிப் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் தேவாரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காட்டுயானையைப் பிடிக்க முடியாமல் முகாமுக்குத் திரும்பியது. அதைத் தொடர்ந்து, ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால்,  கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு, முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம், விஜய் என்ற இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை, முதலில் கம்பம் பகுதியில் நிறுத்தப்பட்டு, பின்னர் தேவாரம் மலை அடிவாரப் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்நிலையில், தீபாவளி கொண்டாட இரண்டு கும்கி யானைகளும் முதுமலை முகாமுக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றது. ஒற்றை காட்டு யானையால் தொடர் அச்சுறுத்தல்களைச் சந்தித்துவந்த தேவாரம் பகுதி விவசாயிகள், இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். "கடந்த முறை கும்கி வந்தது, காட்டு யானையைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பினோம். அது நடக்கவில்லை. சரி, இந்த முறையாவது காட்டு யானையைப் பிடிப்பார்கள் என்று நினைத்திருந்தோம். தீபாவளி கொண்டாட சென்றுவிட்டது. இனி, ஒவ்வொரு இரவும் காட்டு யானை பயத்தில்தான் நாங்கள் இருக்க போகிறோம். எத்தனை நாள்தான் நாங்கள் இப்படி கஷ்டப்படுவது என்றே தெரியவில்லை" என்றனர்.