வெளியிடப்பட்ட நேரம்: 14:42 (05/11/2018)

கடைசி தொடர்பு:14:42 (05/11/2018)

குளிர்பானத்தில் மயக்க மருந்து! - ட்ரெயினிங்கில் பெண் இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடுமை

பெண் இன்ஜினீயருக்கு தொல்லை கொடுத்த ராஜசுந்தர்

சென்னையை அடுத்த சேலையூரில் பயிற்சிக்கு வந்த திருச்சியைச் சேர்ந்த பெண் இன்ஜினீயருக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்தவரை போலீஸார் கைது செய்தனர். 

தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரியை திருச்சியைச் சேர்ந்த சகோதரிகள் சந்தித்தனர். அவர்கள் கண்ணீர்மல்க ஒரு சம்பவத்தைக் கூறினர். அவர்களில் ஒருவருக்கு 21 வயது. இன்ஜினீயரிங் படித்துள்ளார். இவர், சேலையூரில் ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அந்த நிறுவனத்தை நடத்திவரும் ராஜசுந்தர் என்பவர், பெண் இன்ஜினீயருக்குக் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதைக்குடித்தவுடன் மயங்கிய அந்தப் பெண் இன்ஜினீயரை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்த ராஜசுந்தர், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார். படத்தை வெளியிடாமல் இருக்க ஒரு லட்சம் ரூபாய் கேட்கிறார். இதனால் அந்த நிறுவனத்தில் பயிற்சியைத் தொடராமல் திருச்சிக்குச் சென்றுவிட்டேன். அதன்பிறகு எனது சகோதரியிடம் போனில் பேசிய ராஜசுந்தர், அவரையும் மிரட்டியுள்ளார் என அந்த இரண்டு பெண்களும் கூறியுள்ளனர். அதைக் கேட்டதும் இணை கமிஷனர் மகேஸ்வரி உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தார். தொடர்ந்து துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் வினோத்சாந்தாராம், சேலையூர் இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் சகோதரிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சேலையூர் கற்பகாநகரில் கன்சல்ட்டிங் நடத்திவந்த ராஜசுந்தர் என்பவரை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ராஜசுந்தர் என்பவர், வெளிநாடுகளிலும் ஐடி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு வாங்கிக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சேர விரும்புபவர்கள் இவரிடம் பயிற்சியைப் பெறுவதுண்டு. பயிற்சியின்போது ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று ராஜசுந்தர் அறிவித்ததால் பலர், இவரிடம் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண் இன்ஜினீயர் பயிற்சியில் சேர்ந்துள்ளார். அவரிடம் பழகிய ராஜசுந்தர், பெண் இன்ஜினீயருக்குத் தெரியாமல் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். அதைக் காட்டி அவரை மிரட்டியும் உள்ளதாக பெண் இன்ஜினீயர் எங்களிடம் புகார் கொடுத்துள்ளார். ராஜசுந்தரிடம் விசாரித்தபோது அவர், `தன்னிடம் எந்தப் படமும் இல்லை' என்று முதலில் மறுத்தார். பிறகு அவரிடம் விசாரித்தபோது, `ஆபாச படம் எடுத்தது உண்மை' என்று தெரியவந்தது. இதனால் திருச்சிப் பெண் இன்ஜினீயர் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் கொடுத்த புகாரின்பேரில் ராஜசுந்தரை பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``திருச்சியைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் தன்னுடைய பெயர் வெளியில் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எங்களிடம் வேண்டுகோள்விடுத்தார். இதனால்தான் புகார் கொடுத்தவர்களின் விவரங்களை நாங்கள் வெளியிடவில்லை. மேலும் திருச்சிப் பெண் இன்ஜினீயரை மிரட்டியதற்கான ஆதாரங்கள் எங்களிடம் சிக்கியுள்ளன. இதனால் ராஜசுந்தரை கைது செய்துள்ளோம். அவர் மீது வேறு யாராவது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

திருச்சிப் பெண் இன்ஜினீயரைப்போல வேறு யாரிடமாவது இதுபோல நடந்துள்ளாரா என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டதற்கு, ``இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சிப் பெண் இன்ஜினீயர் மட்டும்தான் புகார் கொடுத்துள்ளார். தேவைப்பட்டால் அவரை  போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். ராஜசுந்தர் மீது புகார் கொடுத்த திருச்சிப் பெண் இன்ஜினீயரிடம் விசாரித்தபோது எங்களுக்குச் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன'' என்றார். 

``ராஜசுந்தர் எப்படித் திருச்சி இன்ஜினீயரை தன்னுடைய வலையில் வீழ்த்தினார் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ராஜசுந்தர், டிப்டாப்பாக வலம் வருவார். நுனி நாக்கில் ஆங்கிலம் சரளமாகப் பேசுவார். அவரின் பேச்சில் யாரையும் மூளைச்சலவை செய்துவிடுவார். இந்தச் சமயத்தில்தான் திருச்சிப் பெண் இன்ஜினீயர் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு ஐடி நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாக ராஜசுந்தர் வாக்குறுதி கொடுத்துள்ளார். பிறகு நைசாக திருச்சிப் பெண் இன்ஜினீயரின் குடும்பப் பின்னணிகளை தெரிந்துகொண்ட அவர், தன்னுடைய சுயரூபத்தை வெளியில் காட்டத் தொடங்கியுள்ளார். தன் மீது சந்தேகம் வராமல் நடந்துகொண்டுள்ளார். இந்தச் சமயத்தில்தான் பயிற்சி முடித்து வீட்டுக்குக் கிளம்பிய திருச்சிப் பெண் இன்ஜினீயரிடம் உங்களிடம் வேலை தொடர்பாகப் பேச வேண்டும் என்று அழைத்த ராஜசுந்தர், குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அதில் ஏற்கெனவே மயக்க மருந்து கலந்திருந்ததால் அதைக் குடித்ததும் திருச்சிப் பெண் மயங்கிவிட்டார். பிறகு அவரை தன்னுடைய செல்போனில் படம் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்த பெண் இன்ஜினீயர் என்ன நடந்தது என்று கேட்டதற்கு திடீரென நீங்கள் மயங்கிவிட்டீர்கள் என்று சொல்லி சமாளித்துள்ளார். அதன்பிறகு அன்று நடந்த சம்பவத்தை திருச்சிப் பெண் இன்ஜினீயர் மறந்துவிட்டார். ஆனால், செல்போனில் இருந்த சில படங்களை காண்பித்தபோதுதான் திருச்சிப் பெண் இன்ஜினீயர் அதிர்ச்சியடைந்தார்" என்கின்றனர் சேலையூர் போலீஸார்.