வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (05/11/2018)

கடைசி தொடர்பு:16:04 (05/11/2018)

``அதிகமா கொடுக்கணும்!" − ஓ.பி.எஸ் Vs ஜக்கையன்

தேனி மாவட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையனுக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், தங்களது ஆதரவாளர்களுக்கு கொடுக்கும் தீபாவளி பணத்திலும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஜக்கையன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3 நாள்களுக்கு முன்பு, பெரியகுளம் ரோட்டில், லெட்சுமிபுரம் அருகே உள்ள பண்ணை வீட்டுக்கு தன் ஆதரவாளர்களை வரவழைத்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துவிட்டு, தீபாவளிப் பணம் கொடுத்தார். நகரம், கிளை, ஒன்றியம், வார்டு என கட்சியின் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை வரவழைத்து பணம் கொடுத்தனுப்பினார் பன்னீர்செல்வம். இதைக்கேள்விப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ'வுமான ஜக்கையன், நேற்று தன் ஆதரவாளர்களை அழைத்து தீபாவளி வாழ்த்துக் கூறி, தீபாவளி பணம் கொடுத்திருக்கிறார். அப்போது, ``பன்னீர்செல்வத்தைவிட அதிகமா பணம் கொடுக்கணும்!" என்று அவர் பேசி திட்டமிட்டு அதிக பணம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கம்பம் நகரச்செயலாளரும், ஓ.பி.எஸ் ஆதரவாளருமான ஆர்.ஆர்.ஜெகதீசனை தவிர்த்து மற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்து வரவழைத்து தீபாவளிப் பணம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஓ.பி.எஸ் − ஜக்கையன் பனிப்போர் என்று உச்சத்துக்கு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.