வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/11/2018)

கடைசி தொடர்பு:16:20 (05/11/2018)

ஸ்வாதிக்கு காட்டிய அக்கறை ராஜலட்சுமிக்கு காட்டாதது ஏன்? - திருமாவளவன் கேள்வி

``ஸ்வாதிக்கு காட்டிய அக்கறையை இந்தச் சமூகம்  ராஜலட்சுமிக்கு காட்டவில்லை'' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டியுள்ளார்.

ஆத்தூர் சிறுமி ராஜலட்சுமி கொடூரக் கொலையைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் போராட்டம்  நடத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வந்திருந்தார். அவர் கிரான்ட் எக்ஸ்டன்ஸர் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினார். அவருடன் ராஜலட்சுமியின் பெற்றோரும் உடனிருந்தனர்.

அதில் பேசிய திருமாவளவன், ``சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டியில் சிறுமி ராஜலட்சுமியை திருமணமான இளைஞர் தினேஷ் என்பவர் கொடூரமாக கொலை செய்திருப்பது தமிழ்நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது. இதில் பாலியல் துன்புறுத்தலும், சாதியும் சேர்ந்திருக்கிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இப்படி நடந்திருப்பது வேதனை அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட பெற்றோரும், நாங்களும் இது சம்பந்தாக முதல்வரை சந்திக்க இருக்கிறோம். வன்கொடுமை சட்டத்தில் கைது செய்தாலும், குண்டர் தடுப்புச் சட்டம் போட்டாலும் நீதிமன்றத்தின் மூலம் உடனே வெளியே வர வாய்ப்பிருக்கிறது. அந்தளவுக்கு நீதிமன்றங்கள் தற்போது ஊழல் மையமாகி விட்டது. ராஜலட்சுமியின் கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி உடனே கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தருவோம்.

பெண் டி.எஸ்.பி., தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும். வழக்கு நீதிமன்றங்களுக்குச் சென்றாலும் அரசு வழக்கறிஞர்களின் மெத்தனப் போக்கால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். அதனால் இந்த வழக்குக்கு பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் சிறப்பு வழக்கறிஞர் மூலம் வழக்கு நடத்தப்பட வேண்டும்.

காவல் துறையினர் அவர் மனநோயாளி என்றும், எந்த உள்நோக்கமும் இல்லாமல் கொலை செய்தார் என்று சொல்பவர்களால் நிச்சயம் நீதி கிடைக்காது. சென்னை ஸ்வாதிக்கு காட்டிய அக்கறை ஏன் ராஜலட்சுமிக்கு காட்ட மனம் மறுக்கிறது என்று தெரியவில்லை. தமிழக அரசும், ஜனநாயக சக்திகளும் வெளிப்படையாக கண்டிக்கவில்லை. முதல்வரின் சொந்த மாவட்டம் என்பதால் கருத்துக் கூறுவார், நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளோம்'' என்றார்.