வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (05/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (05/11/2018)

நிலவேம்புக் கசாயம் அரசியலில் களம் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்!

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர். அந்த அரசியலில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

நிலவேம்பு கசாயம் விநியோகம்

டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருவதால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாகக் கூட்டம் அலைமோதி வருகிறது. 

அத்துடன், தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சலுக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலியான நிலையில், பன்றிக் காய்ச்சலுக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர, அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

தமிழகத்தை அச்சுறுத்தும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்புக் கசாயம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்பினரும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்க தி.மு.க-வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். `நிலவேம்பு கசாயத்தைத் தொடர்ந்து வழங்கி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்வோம்’ என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால், மாநிலம் முழுவதும் தி.மு.க-வினர் நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறார்கள்.

அ.தி.மு.க-வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறார்கள். அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்த கசாயம் வழங்கிவரும் நிலையில், அந்த அரசியலில் புதிதாக ரஜினி மக்கள் மன்றத்தினரும் களம் இறங்கி இருக்கிறார்கள். நெல்லை மாநகரப் பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் முகாம் அமைத்து நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறார்கள். 

ரஜினி மக்கள் மன்றம்

பாளையங்கோட்டை, மார்க்கெட், நெல்லை டவுன், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்டக் கெளரவ செயலாளர் பானுசேகர், இளைஞர் அணி செயலாளர் ஷபி முகம்மது, துணைச் செயலாளர்கள் தளபதி முருகன், தாயப்பன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், யார் நிலவேம்பு குடிநீர் விநியோகித்தாலும் மக்கள் ஆர்வத்துடன் அதை வாங்கிப் பருகுகிறார்கள். அந்த அரசியலை ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களின் அரசியலுக்குப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதை பிற கட்சியினர் ஆச்சர்யத்துடன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.