வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/11/2018)

கடைசி தொடர்பு:17:46 (05/11/2018)

பட்டாசு வாங்கினால் மரக்கன்று இலவசம்! சுற்றுச்சூழலை காக்க புதுமுயற்சி

தஞ்சாவூரில் உள்ள பட்டாசுக் கடை ஒன்றில் சுற்றுச் சூழலைக் காப்பதற்காக பட்டாசு வாங்கும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகிறார்கள். மேலும், இலவசமாகக் கொடுக்கிறோம் என்பதற்காக வீணாக்கி விடாமல் கன்றை மரமாக்கி விட வேண்டும் என எடுத்துக் கூறுகின்றனர். பட்டாசுக் கடையினரின் இந்த முயற்சியைப் பொதுமக்கள் பாராட்டிச் செல்கின்றனர்.

இலவச மரம் கொடுக்கும் பட்டாசு உரிமையாளர்

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் காமராஜர் சிலை அருகே உள்ளது கங்கா பட்டாசுக் கடை. இங்கு பொதுமக்கள் ஆர்வமாக பட்டாசு வாங்குகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை இலவசமாகத் தருகிறார் கடையின் உரிமையாளர் விஸ்வலிங்கம். அதோடு ஏதோ இலவசமாக மரக்கன்று கொடுக்கிறோம் என இல்லாமல், `இதை ஊன்றி தண்ணீர் ஊற்றி மரமாக்கி விடுங்கள்' என்று அன்புடன் கோரிக்கை வைக்கிறார். மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள், `நிச்சயமாக இதை மரமாக்கி விடுவோம்' என்பதோடு `பட்டாசு வெடிக்கும் நாங்க, சுற்றுச்சூழலை காக்க இந்த தீபாவளியிலிருந்து இதுபோன்ற செயல்களைச் செய்வோம்' எனக் கூறிச் சென்றனர்.

இதுகுறித்து பட்டாசுக் கடை உரிமையாளர் விஸ்வலிங்கத்திடம்  பேசினோம். ``கடந்த பல ஆண்டுகளாகவே பட்டாசு வெடிப்பது சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. பட்டாசு வெடிப்பதன் மூலம் ஏற்படும் புகை காற்றை அதிக அளவு மாசடையவைக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். இந்த வருடம் நீதிமன்றம் மொத்தமே இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், மக்கள் பட்டாசுகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கும் பட்டாசு இருபது நிமிடத்தில் வெடித்து விடலாம். ஆனால், மக்கள் கொஞ்ச கொஞ்சமாக வெடிப்பார்கள். மேலும், எல்லோரும் ஒரே நேரத்தில் வெடிப்பதும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

பட்டாசு கடை உரிமையாளர் விஸ்வலிங்கம்

இது ஒரு புறம் இருந்தாலும் பட்டாசு தொழிலில் லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கி இருக்கிறது. தீபாவளியை மட்டும் நம்பி நாங்கள் இந்தக் கடையை வருடம் முழுவதும் நடத்தி வருகிறோம். இருந்தாலும் பட்டாசினால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருந்து வந்தது. அதனால் இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசு வாங்கும் அனைவருக்கும் மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து வருகிறோம். இவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்கினால்தான் என்ற கணக்கு எல்லாம் இல்லை. சும்மா பார்த்துவிட்டுச் சென்றாலும் மரக்கன்றுகள் தருகிறோம். சிறுவர்கள் பட்டாசு வாங்க அதிகம் வருகிறார்கள். அவர்களிடம் சுற்றுச் சூழல் குறித்த அவசியத்தை வலியுறுத்தி எடுத்துக் கூறுவதோடு மரக்கன்றையும் கொடுத்து அடுத்த தீபாவளிக்குள் இதை மரமாக்கிவிட வேண்டும் எனக் கூறுகிறேன். பெரியவர்களிடம் இலவசமாக கொடுக்கிறோம் என வீணாக்கி விடாமல் மரமாக்கி விடுங்கள் எனக் கூற அவர்களும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். இதுவரை 10,000 மரக்கன்றுகள் வரை கொடுத்துவிட்டோம். இது ஒரு சிறிய முயற்சிதான். அடுத்த வருடம் சங்கத்தில் உள்ளவர்களிடம் பேசி சுற்றுச்சூழலை காக்கும் வகையில் இன்னும் பல செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க