வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (05/11/2018)

கடைசி தொடர்பு:16:41 (05/11/2018)

‘கள்ளக் கதையை வைத்து கள்ள ஓட்டு படம் எடுக்கிறார்கள்’ - `சர்காரை’ கிண்டலடித்த தமிழிசை

``திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ எடுத்து வைத்துக்கொண்டு படம் வெளியிடுகிறார்கள்'' எனத் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, லாலு பிரசாத் போன்றவர்கள் மக்களைக் காப்பாற்றுவதற்குக் கூட்டணி அமைக்கவில்லை. தம் மக்களைக் காப்பாற்றவே கூட்டணி அமைத்துள்ளனர். சிதம்பரம் எப்போது உள்ளே செல்வார் எனத் தெரியாத நிலையில் அவர்கள் மோடியை விமர்சனம் செய்துகொண்டிருகிறார்கள். ஆனால், மோடி தீபாவளி பரிசாகக்கூட பல நல்ல திட்டங்களை அறிவிக்கவுள்ளார். ஏற்கெனவே பல நல்ல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சாமானியர்களுக்கான ஆட்சியாகத்தான் மோடி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை கார்ப்பரேட்டுக்கான ஆட்சி எனப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது கார்ப்பரேட்டுக்கான ஆட்சி இல்லை காமன் மேனுக்கான ஆட்சி என மோடி நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.

சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு கரு மற்றவருடையது உடல் என்னுடையது எனக் கூறுகின்றனர். ஆக அவர்கள் துறையிலேயே நேர்மையை கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து மிகப் பெரிய நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் எனப் பேசுவதெல்லாம் திரைப்படத்தைப் போன்ற ஒரு மாயை மட்டுமே. இதை, பாக்யராஜ் போன்றவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். கள்ளக் கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றிய படம் எடுக்கிறார்கள். 

தினம் தினம் மாறுபாடுகள் நடக்கும் ஒரு நிலையற்ற தன்மை, தமிழக அரசியலில் உள்ளது. அதற்குத் தினகரன் போன்றவர்கள் காரணமாக இருக்கின்றனர். ஸ்டாலின் போன்றவர்கள் அதற்கு ஆதரவு அளிக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.