வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (05/11/2018)

ரூ.1 கோடியை இழந்த வாலிபர்கள்... அதிகாலையில் கொள்ளையர்கள் கொடுத்த அதிர்ச்சி

ஒரு கோடி ரூபாயை வழிப்பறி செய்த வழக்கில் 5 பேரை திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 கொள்ளையர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த சில வருடங்களாகத் திருச்சி பாலக்கரையில் வசித்து வருவதுடன், அப்பகுதியில் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவரிடம் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமம், மேலத்தெருவை சேர்ந்த சுந்தரேசன், மன்றாயர் குடிக்காட்டைச் சேர்ந்த மதியழகன் ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள். மேலும், ஃபைனான்ஸியர் முருகேசன், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன்மூலம், சென்னையில் உள்ள தொழிலதிபர்களுக்கு பணம் ஃபைனான்ஸ் கொடுப்பதுடன், அதை வட்டியுடன் வசூலிப்பது வழக்கமாம். இந்நிலையில், முருகேசனிடம் பணியாற்றும் சுந்தரேசன் மற்றும் மதியழகன் ஆகியோர் சென்னை சென்று முருகேசன், பல தொழிலதிபர்களிடம் கொடுத்திருந்த பணத்தை வசூலித்தனர்.

வசூலித்தப் பணத்தை தனித்தனி பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு, நேற்று இரவு சென்னையிலிருந்து ஆம்னி பேருந்தில் திருச்சிக்குப் புறப்பட்டனர். அவர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்து இறங்கினர். அங்கிருந்து செல்வதற்காக ஆட்டோ பிடிக்க நின்றுகொண்டிருந்தபோது, கார் ஒன்று வந்து அவர்கள் அருகில் நின்றது. திடீரென அந்தக் காரில் இருந்து இறங்கிய 4 பேர், சுந்தரேசன் மற்றும் மதியழகன் ஆகியோரிடம் இருந்த பேக்கைப் பறித்தனர். ஆனால், இருவரும் விடாமல் போராடவே, அவர்களைத் தாக்கிய மர்மக் கும்பல் ஒரு கோடி ரூபாய் வைத்திருந்த பேக்கை பறித்துக்கொண்டு, காரில் ஏறி தப்பிச் சென்றது. ஆனாலும் விடாமல் மதியழகனும் சுந்தரேசனும் காரை துரத்திக்கொண்டு ஓடினர். ஆனால், கார் மின்னல் வேகத்தில் சென்றதால் அவர்களால் காரை பிடிக்க முடியவில்லை.

அதையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தனர். இதையடுத்து சம்பந்தபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், போலீஸ் உதவி ஆணையர் கோடிலிங்கம், இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் பொன்மலை குற்றப்பிரிவு உதவி ஆணையர் சச்சிதானந்தம் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார், சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். ஆனால், அதில் காட்சிகள் சரியாகப் பதிவாகவில்லை. மேலும், இதே நிதி நிறுவன ஊழியர்களிடம் கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள வழிவிடும் முருகன் கோயில் பகுதியில் 95 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியது. பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் ஆறு மாதத்துக்குப் பிறகு, போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். திருச்சி மையப்பகுதியில் ஒரு கோடி ரூபாயைக் காரில் வந்த கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனிப்படை அதிகாரிகள், 4-ம் தேதி இரவு 7 மணிக்குத் திருச்சி மத்திய தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் சென்னை, மண்ணடி டேவிட்சன் தெருவைச் சேர்ந்த அப்துல் இஸ்மாயில், சென்னை பம்மல் முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் ஜாபரின் மகன் முகம்மது ரபீக் என்பது தெரியவந்தது. இவர்கள்தான், ரூபாய் 1 கோடி பணத்தைத் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பறித்துச் சென்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க, அடுத்து தனிப்படை அப்துல் இஸ்மாலையும் முகமது ரபீக்கையும் சென்னைக்கு அழைத்துச் சென்று சென்னை பிராட்வே, பிரகாசம் சாலையைச் சேர்ந்த  ஜாகீர் உசேன், சென்னை மண்ணடி பூ ஐயர் சந்து பகுதியைச் சேர்ந்த முகமது சமீர் மற்றும் சென்னை எருக்கச்சேரி, சிவசங்கரன் தெருவைச் சேர்ந்த காஜாமொய்தீன் மகன் சாகுல் ஹமீது ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து  ரூ. 4.72 லட்சம் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் இன்னும் சிலர் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.  5 பேர் கைது செய்யப்பட்டாலும் மீதம் 95 லட்சத்துடன் தலைமறைவாக உள்ள முக்கிய நபர்கள் சிக்கினால்தான் முழுவிபரம் தெரியவரும் என்கிறார்கள் திருச்சி மாநகரப் போலீஸார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க