வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (05/11/2018)

கடைசி தொடர்பு:17:08 (05/11/2018)

தடியடி ஆபீஸர்ஸ்! `சர்கார்' தள்ளுமுள்ளு

கூடுவாஞ்சேரியில் `சர்கார்' பட டிக்கெட் வாங்கும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ரசிகர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவான ‘சர்கார்’ திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் `சர்கார்' திரைப்படம் வெற்றியடைய வேண்டி கட்டவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், போஸ்டர்கள் ஒட்டியும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

காஞ்சிபுரத்தில் பாபு, கார்த்திகேயன் உள்ளிட்ட திரையரங்குகளில் 1,000 ரூபாய்க்கு சர்கார் திரைப்பட டிக்கெட் விற்கப்படுகிறது. அதையும் பொருட்படுத்தாமல் விஜய் ரசிகர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். அடுத்த காட்சிக்கும் திரையரங்குகளின் ஊழியர்களே டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்றுவிடுகிறார்கள். அதுபோல் கூடுவாஞ்சேரியில் உள்ள வெங்கடேஸ்வரா திரையரங்கில் காலையில் `சர்கார்' டிக்கெட் விற்பனையின்போது விஜய் ரசிகர்கள் வரிசையாக நிற்காமல், முண்டியடித்துக்கொண்டு பிரச்னை செய்துள்ளனர்.

காவல்துறையினர் அவர்களை ஒழுங்குபடுத்த முயன்றும், கடைசிவரை கட்டுப்படுத்த முடியவில்லை. சிலர் மது அருந்திவிட்டு அங்கிருந்த காவலர்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தனர். ரசிகர்களால் டிக்கெட் விற்பனையில் தொடர்ந்து பிரச்னை நீடித்தது. இதனால் அங்கிருந்த காவலர் ஒருவர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார். இதைக்கண்டதும் விஜய் ரசிகர்கள் தெறித்து ஓடினார்கள். பின்பு வரிசையில் நின்றவர்களுக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்கப்பட்டது. தடியடிக்குப் பின்னரே அந்த இடம் இயல்பு நிலைக்கு வந்தது. தடியடி ஆபீஸர்களாகப் போலீஸார் மாறியது அங்கு வந்த பொதுமக்களையும் ரசிகர்களையும் வேதனையடைய வைத்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க