வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (05/11/2018)

கடைசி தொடர்பு:21:30 (05/11/2018)

``இது மக்களை ஏமாற்றும் தந்திரச் செயல்" - சொத்துவரி உயர்வைக் கண்டித்த டி.டி.வி.தினகரன்

தினகரன், சொத்துவரி உயர்வு

டுமையான நிதிப் பற்றாக்குறையால் தள்ளாடி வரும் தமிழக அரசு, குடியிருப்புகளுக்கான சொத்து வரி உயர்வை, அண்மையில் அமலுக்குக் கொண்டுவந்தது. அதன்படி, குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50 சதவிகிதமாகவும், வாடகைக் குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவிகிதமாகவும், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிகிதமாகவும் வரி உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், கண் துடைப்பாக வாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரி உயர்வு மட்டும் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டது. ஆனால், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அறிவித்த வரி உயர்வுக்கு அதிகமாக வரி வசூலிக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.

குடியிருப்பு சொந்தக்காரர்கள் இதுவரை கட்டிவந்த வரித்தொகையிலிருந்து, இருமடங்கு அதிகமான வரித்தொகையை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், வருமானத்தில் பெரும்பகுதி வரிசெலுத்தவே போய்விடும் என்று, அவர்கள் வேதனைப்படுகின்றனர். இந்த வரி உயர்வால் வீட்டுச் சொந்தக்காரர்கள் வீட்டு வாடகையை மேலும் உயர்த்துவார்கள் என்பதால், வாடகை குடியிருப்புவாசிகளும் கவலைகொள்ள ஆரம்பித்துள்ளனர். 

இந்த நிலையில், சொத்துவரியை பலமடங்கு உயர்த்தி வசூலிப்பதன் மூலம், மக்களின் மீது பெரும் சுமையை பழனிசாமி அரசு சுமத்துவதாக, அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சொத்துவரி கணக்கிடும் முறையில், நிலத்தின் தற்போதைய மதிப்பைக் கணக்கில் எடுத்து, உச்சபட்சமாக எந்த அளவுக்கு உயர்த்தமுடியுமோ அத்தனை வழியையும் பின்பற்றி, சொத்து வரி உயர்த்தி நோட்டீஸை அனுப்பியிருக்கிறார்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கடந்தமுறை மக்கள் செலுத்திய வரியைக் காட்டிலும், நூறு மடங்குக்கு மேலாக கூடுதல் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு மக்களை அரசு உட்படுத்தி உள்ளது.

மக்களுக்கான அரசாங்கத்தின் செயல் இது அல்ல, மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல். குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம், வாடகை குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவிகிதம் என்று மேம்போக்காக அறிவித்து மக்களிடமிருந்து பலமடங்கு வசூல் செய்வது மக்களாட்சியின் முறையே அல்ல. ஏற்கெனவே 60 சதவிகிதத்துக்குமேல் பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய அரசு, தற்போது சொத்து வரியை பலமடங்கு உயர்த்தி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்துவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

தங்களின் நிர்வாகத் திறமையின்மைக்காக மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் எடப்பாடி அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.