வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (05/11/2018)

கடைசி தொடர்பு:20:28 (05/11/2018)

`அனிதாவின் நிலை யாருக்கும் வரக்கூடாது!’ - ப்ளஸ் டூ மாணவி உருவாக்கிய #aNEETa செயலி

வெறும் வினாத்தாள் கொண்ட செயலியாக மட்டுமன்றி அக்கேள்விக்குரிய சரியான பதிலையும் இந்தச் செயலியின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். எந்தப் பாடத்தைச் சார்ந்த கேள்விகளுக்கு நன்றாக நாம் பதில் அளிக்கிறோம் என்பதை இந்தச் செயலியில் உள்ள வரைபடம் காட்டும்.

நீட் தேர்வு வேண்டுமா கூடாதா என்கிற பெரிய விவாதம் தமிழகத்தில் எழுந்ததற்கு நாம் கொடுத்த விலை மாணவி அனிதாவின் உயிர். அனிதாவின் மரணத்துக்குப் பிறகு நீட் தேர்வு குறித்த விவாதங்கள் இங்கே மேலும் உக்கிரமானது. ஒருகட்டத்தில் மருத்துவம் படிக்க இருக்கும் தமிழக மாணவர்களால் நீட்டைப் புறக்கணிக்க முடியவில்லை. அது தவிர்க்க முடியாத நுழைவுத் தேர்வாக மாறிவிட்டது. மாணவர்கள் அதில் எப்படி வெற்றி கொள்கிறார்கள் என்பதுதான் அவர்கள் முன்னே இருக்கும் ஒரே சவால். 

தங்கள் வசதி வாய்ப்புகளுக்குத் தகுந்தாற்போல் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை நீட் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள். மாணவர்களும் தங்களைத் தயார்படுத்தியும் வருகின்றனர். இத்தகையச் சூழலில் டெல்லியில் வசிக்கும் ப்ளஸ் டூ மாணவி இனியாள், நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு என்று ஓர் அப்ளிகேஷன் தயாரித்து இருக்கிறார். அந்தச் செயலியின் பெயர் aNEETa. அனிதாவின் நினைவாக இந்தப் பெயரை வைத்ததாகச் சொல்லும் இனியாள் உருவாக்கிய இதைச் செயலியைக் கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். 

aNEETa

இந்த aNEETa செயலியில் நிறைய வினாத்தாள்கள் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி மாணவர்கள் மாதிரி தேர்வை எழுதலாம். வெறும் வினாத்தாள் கொண்ட செயலியாக மட்டுமன்றி அக்கேள்விக்குரிய சரியான பதிலையும் இந்தச் செயலியின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். எந்தப் பாடத்தைச் சார்ந்த கேள்விகளுக்கு நன்றாக நாம் பதில் அளிக்கிறோம் என்பதை இந்தச் செயலியில் உள்ள வரைபடம் காட்டும். அதன்மூலம் மாணவர்கள் தங்களுடைய பலம் பலவீனங்களைத் தெரிந்துகொள்ளலாம். மட்டுமன்றி, அதற்கு ஏற்றாற்போல் பாடங்களில் கவனம் செலுத்தவும் முடியும். இப்படித் தொடர்ந்து பயிற்சி எடுப்பதன் மூலம் உண்மையான தேர்வு எழுதுகிற சமயத்தில் அவர்களுக்கு பயமோ பதற்றமோ இருக்காது. 

aNEETa செயலியை உருவாக்கிய இனியாள் பேசும்போது, ``என்கிட்ட இருக்கிற கொஸ்டீன் பேப்பர்ஸ் அண்ட் ஆன்சர்ஸ் வெச்சுத்தான் நான் இதை உருவாக்கி இருக்கேன். வேற கொஸ்டின் பேப்பர்ஸ் வெச்சிருக்கவங்க என்கிட்டே ஷேர் பண்ணிக்கோங்க. அதையும் இந்த அப்ளிகேஷன்ல சேர்த்து இன்னும் பயனுள்ளதா மாத்தலாம். என்னோட இமெயில் ஐடி INIYAALKANNAN@GMAIL.COM. இந்த அப்ளிகேஷன நான் உருவாக்கினதுக்குக் காரணமே வசதி குறைவாக உள்ள மாணவர்களை மனசுல வெச்சுத்தான். வசதி குறைவாக உள்ள பல மாணவர்களுக்கு கோச்சிங் க்ளாஸ் போக முடியாது. அவங்களுக்கு இந்த அப்ளிகேஷன் நல்லா யூஸ்புல்லா இருக்கும்.

அனிதாவிற்காக நீட் செயலி கண்டுபிடித்த மாணவி

மாணவி அனிதாவின் ஞாபகமாத்தான் இந்த அப்ளிகேஷனுக்கு aNEETa ன்னு பேர் வெச்சேன். அனிதாவின் நிலைமை இனி யாருக்குமே வராது" என உறுதியாகச் சொல்கிறார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இனியாள்.