வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/11/2018)

`1,000 ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு!’ - பேனர் வைத்த சென்னை பார் மேலாளர் கைது

சென்னையில் ரூபாய் 1000-க்கு மேல் மதுகுடித்தால் எல்.இ.டி டிவி பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்த பார் மேலாளர் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பார்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் பார் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த பேனரில், ``ரூ1000/-க்கும் மேல் மது அருந்துபவருக்கு குலுக்கல் முறையில் 32 இன்ச் கலர் டிவி, குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் கொடுக்கப்படும்'' முக்கிய குறிப்பாக `சைடிஸ் இலவசம்'' என எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் வைரலாகவே, அங்கு கூட்டம் கூடியது. `குடி' மக்களின் செல்ஃபோன் எண், வீட்டு முகவரியால் குலுக்கல் பெட்டி நிரம்பியது. மேலும், அந்த பாரில் குடிமகன்கள் பலர் விழுந்துகிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜாம்பஜார் காவல்துறையினர் குறிப்பிட்ட பாரில் சோதனை நடத்தினர்.  பார் மேலாளர் வின்சென்ட் ராஜ் மற்றும் பார் உரிமையாளரின் உதவியாளர் முகமது ரியாஸ் ஆகியோரை கைது செய்து, குலுக்கல் பெட்டி மற்றும் டிவி வாஷிங் மிஷினை பறிமுதல் செய்தனர்.