வெளியிடப்பட்ட நேரம்: 00:58 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:12 (07/11/2018)

`கணவன் வற்புறுத்தலாலே வந்தேன்' - பம்பை வந்த அஞ்சு சந்நிதானம் செல்ல தயக்கம்!

சபரிமலை சந்நிதானத்துக்கு செல்வதற்காக வந்த சேர்த்தலையைச் சேர்ந்த அஞ்சு கணவன் வற்புறுத்தலால் வந்ததாகவும், சந்நிதானம் செல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அனைத்து மீடியாக்களும் சபரிமலை நோக்கி திரும்பியுள்ளன. 3,000 காவலர்கள், சிசிடிவி. கேமரா, ஜாமர் கருவி, சந்நிதானத்தில் 2 மணிநேரம் மட்டுமே இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் மத்தியிலும் கடந்த ஆண்டைவிட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையைச் சேர்ந்த அஞ்சு என்ற 30 வயது பெண் தன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பம்பை வந்தார். சபரிமலை சந்நிதானம் செல்ல பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையிடம் கேட்டிருந்தார். இதையடுத்து அவர் எதாவது அமைப்பைச் சேர்ந்தவரா என்றும், அஞ்சுவின் பின்னணி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கணவர் வற்புறுத்தலால் பம்பை வந்ததாகவும், சந்நிதானம் செல்ல விருப்பம் இல்லை என்றும் அஞ்சு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அஞ்சுவின் உறவினர்கள் சபரிமலை வந்து அவரை அழைத்துச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு சந்நிதானம் செல்ல விருப்பம் இல்லை. இருப்பினும் கணவர் கூறினால் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதாகவும் கூறினார். அஞ்சு ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும், பின்னர், கணவர் வற்புறுத்தலால்தான் பம்பை வந்ததாக கூறிய அஞ்சு சந்நிதானம் செல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். இதற்கிடையில் இரண்டு மகள்களுடன் சந்நிதானம் செல்ல வேண்டும் என அஞ்சுவின் கணவர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் அஞ்சு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ``இப்போதைக்கு அஞ்சு சந்நிதானத்துக்குச் செல்லவில்லை" என பத்தணம்திட்டா எஸ்.பி. ராகுல் ஆர்.நாயர் தெரிவித்தார்.