வெளியிடப்பட்ட நேரம்: 01:31 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:15 (07/11/2018)

வேலூரில் களைக்கட்டிய தீபாவளி - 2,000 போலீஸார் பாதுகாப்பு!

தீபாவளிப் பண்டிகை களைக்கட்டியதால் நேற்று இரவு வரை போக்குவரத்து நெரிசலில் வேலூர் சிக்கித் தவித்தது. 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மார்க்கெட்

தொடர் விடுமுறை காரணமாக, வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர், சொந்த ஊர்களுக்குக் கடந்த வெள்ளிக்கிழமை இரவே சென்றுவிட்டனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில், புது ஆடைகள், பட்டாசுகள் வாங்கக் கூட்டம் அலைமோதியதால் நேற்று நகரின் முக்கிய பகுதிகள் ஸ்தம்பித்தன. நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள் எனப் பொதுமக்கள் கூடும் இடங்களில் சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பண்டிகையையொட்டி மாவட்டத்தின் 8 சப் - டிவிஷன்களிலும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்தந்த டி.எஸ்.பி-க்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் மற்றும் வனத்துறையினர் தீபாவளி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதால், ஆந்திராவிலிருந்து செம்மரம் கடத்த வாய்ப்பிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. செம்மரக்கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க மாவட்டத்தின் 14 செக் போஸ்ட்டுகளிலும் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தைக் கடைப்பிடிக்க பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 2 மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.