வெளியிடப்பட்ட நேரம்: 08:41 (06/11/2018)

கடைசி தொடர்பு:09:00 (07/11/2018)

தீபாவளித் திருநாளையொட்டி திருவாவடுதுறை ஆதீனம் அருளாசி!

நாடெங்கும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடும் வேளையில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அனைவருக்கும் அருளாசி கூறியிருக்கிறார்.  

 

Adhinam blessing

 

திருவாவடுதுறை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில், ``வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் இவற்றுக்கெல்லாம் ஆதாரமான இறை உணர்வும் தழைத்திட உறுதுணையாய் இருப்பவை பண்டிகைகள் ஆகும்.  அம்முறையில் தீபாவளிப் பண்டிகை புத்துணர்வை பெருகச் செய்வதில் சிறப்பிடம் பெறுகிறது. தீபாவளியன்று அதிகாலை எழுந்து நீராடுதல் கங்கா ஸ்நானத்துக்குச் சமமாக மதிக்கப்படுகின்றது.  

எனவே, தீபாவளி நாளில் அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு பெரியோரிடம் ஆசிபெற வேண்டும். வானவேடிக்கையில் ஈடுபடும்போது நம்முடைய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காப்பதிலும் அக்கறைகாட்ட வேண்டும்.  

சுற்றத்தார், நண்பர்களிடம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு நல்லுறவை தழைக்கச் செய்ய வேண்டும். பண்டிகை காலங்கள் அப்போதைய மகிழ்ச்சிக்கு மட்டுமல்ல. அம்மகிழ்ச்சியில் இறைபக்தி உணர்வுடன் ஈடுபட்டால் நம் வாழ்க்கையில் சிறந்த திருப்புமுனையை ஏற்படுத்தும்.  எதிர்கால ஏற்றங்களுக்கும் வழிபிறக்கும். சிறந்த பண்புகளை வளர்த்துக்கொள்ளவும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும் தீபாவளி நாளில் மனப்பூர்வமான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.  இந்த ஆர்வத்தை நாமும் வளர்த்து நம் தலைமுறையினரையும் வளர்க்குமாறு நெறிப்படுத்த வேண்டும்.  

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பண்டிகையின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அவர்கள் சிறு வயதிலிருந்து இறைபக்தி உணர்வுடன் பண்டிகையைக் கொண்டாடும் நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு செய்ய வேண்டும். மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒருமைப்பாட்டு உணர்வை வளர்த்திட தீபாவளிப் பண்டிகையை நன்முறையில் பயன்படுத்த வேண்டும். இந்தத் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் இன்பமும், அமைதியும், வளங்களும், இறைபக்தியும் தழைத்து சிறந்திட வேண்டும் என நமது ஆன்மார்த்த மூர்த்தியாக ஸ்ரீஞானமா நடராஜ பெருமான் திருவடி மலர்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்” என்று கூறியுள்ளார்.