வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:55 (07/11/2018)

வேலூரில் இயலாதோருடன் தீபாவளிக்கொண்டாட்டம் - ரஜினி மக்கள் மன்றத்தினர் அசத்தல்!

பெற்ற பிள்ளைகளால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இயலாமையால் வாடுவோருடன், வேலூர்  ரஜினி மக்கள் மன்றத்தினர் தீபாவளிக் கொண்டாடினர்.

ரஜினி மக்கள் மன்றம்

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் பார்வையின்றி, கை, கால்கள் இழந்து, மனநலம் பாதிக்கப்பட்டுச் சுற்றித்திரிந்த 80-க்கும் மேற்பட்டோரை ரஜினி மக்கள் மன்றத்தினர் மீட்டனர். அவர்களைக் குளிக்க வைத்துப் புது ஆடைகளை உடுக்க வைத்தனர். பின்னர், உணவு வழங்கிப் பட்டாசு வெடித்துத் தீபாவளியைக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரவி, ``ஆண்டுதோறும் மாணவர்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுடன் தீபாவளிக் கொண்டாடுவது வழக்கம்.இந்த வருடம், இயலாமையால் வாடுவோருடன் கொண்டாட என் மனம் விரும்பியது. காரணம், நீங்கள் அனைவரும் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள். உடலால் உழைக்க முடியாதவர்கள். பண்டிகைக் காலங்களில் வாடிக்கொண்டிருப்பவர்கள்.

என்னால் முடிந்தவரை ஒரு பண்டிகையாவது, உங்களோடு உங்கள் மகனாக, தம்பியாக, உறவினராகக் கொண்டாட விரும்பினேன்.
என் பெற்றோரைச் சிறு வயதிலேயே இழந்துவாடினேன். உங்களோடு கொண்டாடும், இந்தத் தீபாவளி என் அப்பா, அம்மாவோடு கொண்டாடியது போன்றதொரு சந்தோஷம் தருகிறது" என்று பேச்சை முடித்தவுடன் கண்கலங்கினார்.