வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:03 (07/11/2018)

நிலுவைத்தொகை இல்லை; போனஸ் இல்லை - கறுப்பு தீபாவளியாக அனுசரித்த உப்பு நிறுவனத் தொழிலாளர்கள்!

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளி நாளில் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உப்பு நிறுவன தொழிலாளர்கள்
 

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்குக் கடந்த பல மாதங்களாக நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. மேலும், இந்த ஆண்டு தீபாவளி போனஸும் வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை மற்றும் போனஸ் வழங்கக் கேட்டு கடந்த 1-ம் தேதி முதல் உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாள் உப்பு நிறுவனத்தினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு  தீர்வு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த 4 நாள்களாக உப்பு நிறுவனத்தின் முன் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். 

இந்த நிலையில், தீபாவளி தினமான இன்று அரசு உப்பு நிறுவன அதிகாரிகளைக் கண்டித்து  துக்க தினமாக கடைப்பிடிக்கும் வகையில் வாலிநோக்கம், மேலக்கிடாரம், திருவரங்கை உள்ளிட்ட உப்பு நிறுவனத் தொழிலாளர்கள் வசிக்கும் 17 கிராமங்களில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கிராமங்களில் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் பின்னரும் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை  எனில் அடுத்தகட்ட போராட்டமாக அரசு உப்பு நிறுவனத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்த தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.