வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:08:37 (07/11/2018)

உச்ச நீதிமன்ற கட்டுப்பாட்டால் திருவள்ளூரில் களையிழந்த தீபாவளி! 

இந்தியா சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு எந்தவிதமான கட்டளையோ தடையோ அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ விதித்ததில்லை. தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பே நாடெங்கும் குழந்தைகள், இளைஞர்கள் குதுகலமாக இருப்பார்கள்.

பட்டாசு வெடித்து ஆனந்தத்தைக் கொண்டாடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்குக் காலக்கெடு விதித்தது. குறிப்பிட்ட நேரத்தில்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்திருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த விநாடியில் இருந்து நாடு முழுவதும் குறிப்பாக தமிழகம் முழுவதும்  நகைச்சுவை ததும்ப சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் பரபரப்பை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து பலர் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் நோக்கில் பலவிதமான வசனங்களைக் கொண்டு பலர் பல வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்தனர்.  

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்த காலத்துக்குள் பட்டாசுகளை குழந்தைகள் இளைஞர்கள் பொதுமக்கள் வெடித்து மகிழ்ந்தனர். கடந்த காலத்தில்  பட்டாசு வெடிக்க எந்தவிதமான தடையும் இல்லாமல் இருந்ததோ அதைப் போலவே இந்த வருடமும் இருந்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். அதேபோல பட்டாசு விலைகளும்  விண்ணைத்தொடும் அளவுக்கு விலை  உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பட்டாசுகளின் விலை உச்சியைத் தொட்டது. 25 உருப்படி உள்ள முந்நூறு ரூபாய் பாக்கெட் பட்டாசு இந்த ஆண்டு ஐந்நூறு ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.  பட்டாசுக் கடைகளில் வியாபாரங்களும் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. தமிழக அரசு தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் விழாக்காலங்களில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல் செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.