வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (07/11/2018)

கடைசி தொடர்பு:15:28 (07/11/2018)

சாலையில் தள்ளிவிட்ட டி.எஸ்.பி! - கார் மோதி பலியான எலெக்ட்ரீஷியன்

கார் நிறுத்தியதில் ஏற்பட்ட பிரச்னையில் டி.எஸ்.பி. தள்ளிவிட்டதில் சாலையில் விழுந்த எலெக்ட்ரீசியன் மற்றொரு கார் மோதி பலியானார். இந்த வழக்கில் டி.எஸ்.பி. தலைமறைவாக உள்ளார்.

பலியான எலக்ட்ரீசியன் சனல்

திருவனந்தபுரம் மாவட்டம், நெய்யாற்றின்கரை போலீஸ் டி.எஸ்.பி. ஹரிகுமார். இவர் கொடுங்ஙாவிளையில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 5-ம் தேதி இரவு 11 மணிக்கு காரில் வெளியே புறப்பட முயன்றார். காரை எடுக்க இடையூறாக நெய்யாற்றின்கரை காவுவிளையை சேர்ந்த சனல் (32) என்பவரின் கார் நின்றிருக்கிறது. காரை எடுப்பதில் மப்டியில் இருந்த டி.எஸ்.பி. ஹரிகுமாருக்கும், சனலுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் டி.எஸ்.பி. தள்ளியதில் சனல் சாலையில் விழுந்தார். அப்போது வேகமாக வந்த மற்றொரு கார் சனல் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சனல் அரை மணி நேரத்துக்கு மேல் சாலையில் கிடந்துள்ளார். டி.எஸ்.பி. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலின்பேரில் காவலர்கள் அங்குவந்து சனலை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சனலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து டி.எஸ்.பி.மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

மறியல்

இதை தொடர்ந்து டி.எஸ்.பி. ஹரிகுமார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன் அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. தலைமறைவாக உள்ளார். எலெக்ட்ரீசியனாக பணிபுரிந்துவந்த சனலுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.