வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (07/11/2018)

கடைசி தொடர்பு:12:40 (07/11/2018)

`பெயருக்குதான் வழக்கு; ஜாமீனில் விட்டிடுவோம்'- பட்டாசு வெடித்தவர்களை சமாதானப்படுத்திய போலீஸ்

தடை நேரத்தில் பட்டாசு வெடித்ததாக, வேலூர் மாவட்டத்தில் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசு

தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கத் தமிழக அரசு நேரம் அறிவித்தது. இந்த உத்தரவுகள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்தன. இது சாத்தியமா. எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, பட்டாசு வெடிப்பதைத் தடுப்பதா என்று விமர்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் தடை நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 2 பேரைப் பிடித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ``நாங்க மட்டுமா பட்டாசு வெடிக்கிறோம், ஊரேதான் வெடிக்கிறது’ என்று சிக்கிய இளைஞர்கள் கேள்வி எழுப்ப போலீஸார் கிறுகிறுத்துப் போனார்கள். பின்னர், `பெயருக்கு வழக்கு பதிவு செய்கிறோம். உடனடியாக ஜாமீனில் விடுவிக்கிறோம்’ என்று பொதுமக்களை போலீஸார் சமரசப்படுத்தினர். இதுபோன்ற உத்தரவுகளால், பொதுமக்களிடம் தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுவதாக போலீஸார் குமுறினர்.