இளம்பெண் மீது ஆசிட் வீச்சு; முன்விரோதத்தால் நடந்த கொடுமை | Acid attack on the woman in Rameswaram

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (07/11/2018)

கடைசி தொடர்பு:12:55 (07/11/2018)

இளம்பெண் மீது ஆசிட் வீச்சு; முன்விரோதத்தால் நடந்த கொடுமை

ராமேஸ்வரத்தில் ஒரே பிரிவைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளம் பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. காயமடைந்த பெண்ணுக்கு ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே ராஜீவ்காந்தி நகர் மற்றும் டி.எஸ்.எம்.ஏ நகர்ப் பகுதியில் உள்ள ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தீபாவளி தினமான நேற்று இவர்களிடையே மீண்டும் மோதல் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.எம்.ஏ நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இன்று காலை ராஜீவ்காந்தி நகரில் வசித்து வரும் பொக்கார் என்பவரைத் தேடிச் சென்றுள்ளனர். அங்கு பொக்காரின் மனைவி மற்றும் மகள் மட்டுமே இருந்துள்ளனர். இதையடுத்து, அந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை திடீரென வீட்டுக்குள் ஊற்றினர். இதில் வீட்டினுள் இருந்த பொக்காரின் மகள் கெளசல்யா (20) கழுத்துப் பகுதியில் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட கெளசல்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே ஆசிட் வீச்சில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ராஜீவ்காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய நகர் காவல் நிலைய போலீஸார், டி.எஸ்.எம்.ஏ நகர்ப் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.