வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (07/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (07/11/2018)

அரசுப் பேருந்துக்குள் புகுந்த கார்! - அமைச்சர் ஜெயக்குமாரின் முன்னாள் உதவியாளர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

அமைச்சர் உதவியாளர்

கரூர் அடுத்த ராயனூரைச் சேர்ந்த லோகநாதன். இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு மீண்டும் இன்று சென்னைக்கு தன் குடும்பத்துடன் திரும்பிக் கொண்டிருக்கும்போது கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஐவதுகுடி என்ற இடத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது பின்னால் வந்த கார் மோதியதில் லோகநாதன் அவரின் இரண்டு மகன்கள் சிவராமன் மற்றும் நிர்மல் குமார் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் லோகநாதன் மருமகள் ஷாலினி படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரக் குழந்தை தர்ஷன் எந்தவித காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.