வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (07/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (09/11/2018)

''அந்த மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்" யுவராஜுக்கு எதிராக சாட்சி சொன்ன காவல்துறை அதிகாரி!

''அந்த மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்

சேலம் ஓமலூர் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூம் அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு  வருகிறார்கள். வழக்கம் போல யுவராஜூம், அவருடைய ஆட்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 

கோகுல்ராஜ் கொலை வழக்கு, யுவராஜ்

அக்டோபர் 30-ம் தேதி நடைபெற்ற விவாதத்தில் இருந்து...
சாட்சி எண்: 23
பெயர்: செல்வி என்கிற செல்வரத்தினம் (கார் புரோக்கர்)

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்யறீங்க?

செல்வரத்தினம்: நான் பொள்ளாச்சியில் குடியிருக்கிறேன். பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களைத் தெரியுமா?
செல்வரத்தினம்: ( கூண்டில் நிற்பவர்களை பார்த்து விட்டு...) யுவராஜை தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கு சம்பந்தமாக சொல்லுங்கள்.
செல்வரத்தினம்: பொள்ளாச்சியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடைய டாட்டா சஃபாரி டி.என் 41 எஸ் 1564 என்ற வாகனத்தை யுவராஜுக்கு விற்றேன். யுவராஜ் 12.12.2010 காரை பார்த்துவிட்டு 13.12.2010ம் தேதியன்று காரை 5 லட்சத்திற்கு வாங்கினார். யுவராஜ் மனைவி பெயரில் காரை வாங்கியதற்கான ரசீது கொடுக்கப்பட்டது. என்னுடைய அலுவலகம் உள்ள காம்ப்ளெக்ஸில் 'வஞ்சியம்மன் எர்த் மூவர்ஸ்' என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கனகராஜ் என்பவர் மூலம் யுவராஜ் எனக்கு அறிமுகமானார். வாகனத்தை விற்கும்போது வாகனத்தின் பதிவு சான்றிதழ், உரிமையாளரின் பெயர் மாற்றுவதற்கான படிவங்களை கையெழுத்துடன் யுவராஜிடம் கொடுக்கப்பட்டது. வாகனத்தைப் பெற்றபோது வாகனத்திற்கான பதிவுச் சான்றிதழை ஒரு மாதத்தில் மாற்றுவதாக என்னிடம் கூறினார். யுவராஜ் வாங்கிய காரை ஒரு மாதத்திற்குள் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யவில்லை. ஒரு மாதம் கழித்து ஏன் வண்டியை உங்கள் பெயரில் மாற்றவில்லை. என்று நான் கேட்டதற்கு கார் மிகவும் பெரிதாக இருப்பதால் காரை வேறு ஒருவருக்கு விற்பதாக இருக்கிறேன். என்று யுவராஜ் என்னிடம் கூறினார். காரின் டெலிவரி நோட்டில் உள்ள விவரங்களை நான் தான் பூர்த்தி செய்தேன். (டி.என் 41 எஸ் 1564 காரின் விற்பனை ரசீதின் புகைப்பட நகல், பதிவுச் சான்றிதழின் புகைப்பட நகல், டேக்ஸ் இன்வாய்ஸின் புகைப்பட நகல், காப்பீட்டின் புகைப்பட நகல்  ஆகியவை குறியீடு செய்யப்பட்டது) 
வழக்கறிஞர் கருணாநிதி: காரை விற்ற பிறகு உங்களை யாராவது விசாரித்தார்களா?
செல்வரத்தினம்: விற்ற பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ஈரோடு காவல் துறையினர் விசாரித்தார்கள். அதன் பிறகு நாமக்கல் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரித்தார்கள். 

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ செல்வரத்தினத்திடம் குறுக்கு விசாரணை செய்தார்...
வழக்கறிஞர் ஜீ.கே: நீங்க எத்தனை வருஷமா இந்தத் தொழில் செய்து வருகிறீர்கள்?
செல்வரத்தினம்: 18 வருடங்களாகச் செய்து வருகிறேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: அதனால் காரை வாங்கும் போதும், விற்கும் போதும் என்ன செய்ய வேண்டும் என்ற நடைமுறை உங்களுக்குத் தெரியும்?
செல்வரத்தினம்: தெரியும்.
வழக்கறிஞர் ஜீ.கே: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்வதற்கு யாருக்காவது உதவி செய்திருக்கிறீர்களா?
செல்வரத்தினம்: உள்ளூர் நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: வெளியூர் ஆட்களுக்கு கார் வாங்கும் போது உதவி செய்வீர்களா?
செல்வரத்தினம்: வெளியூர் ஆட்களுக்கு செய்யமாட்டேன். 
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்திற்கு காப்பீடு செய்ய வேண்டுமா?
செல்வரத்தினம்: ஆமாம். காப்பீடு செய்ய வேண்டும்.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தை விற்ற 10 நாட்களுக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், வாகனத்தின் காப்பீடு நிறுவனத்திற்கும் வாகனத்தை விற்ற தகவலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு வாகனத்தை விற்ற பிறகு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் விற்ற நபர் தான் பொறுப்பாவார். வாகனத்தை விற்கும் போது, வாகனத்தை விற்பவர் விற்றதற்கான இரசீதை கொடுப்பார். 
வாகனத்தின் விலையின் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு மீதமுள்ள தொகை செலுத்த அவகாசம் கேட்டால் ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தம் ஏற்பட்டால் வாகனத்தை விற்கும் நபர் வாங்கும் நபருக்கு வாகனத்தை ஒப்படைக்கமாட்டார். டெலிவரி நோட்டில் விற்கப்படும் வாகனத்தின் விற்பனைத் தொகை எண்ணாலும், எழுத்தாலும் குறிப்பிட வேண்டும். டெலிவரி நோட் வாகனத்தை விற்கும் நபரிடம் தான் இருக்கும்.
டெலிவரி நோட்டில் திருத்தங்கள் இருந்தால் அதன் மீது வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பெயர் மாற்றம் செய்ய இயலாது. (ஆவணத்தைக் காட்டி...)டெலிவரி நோட்டில் நீங்கள் பூர்த்திசெய்ததை தவிர  கையொப்பம் இல்லை. டெலிவரி நோட்டில் தொகை பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்களா?
செல்வரத்தினம்: டெலிவரி நோட்டில் மீதி தொகை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜீ.கே: டெலிவரி நோட்டில் எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட்ட தொகை திருத்தப்பட்டுள்ளதா?
செல்வரத்தினம்: திருத்தப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ஜீ.கே: டெலிவரி நோட்டை வாகனத்தின் பதிவு சான்றிதழை வைத்துதான் பூர்த்தி செய்ய வேண்டும். வாகனத்தின் பதிவு சான்றிதழில் வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவை முக்கியமானது. டெலிவரி நோட் தயார் செய்தபோது  வாகனத்தின் பதிவு சான்றிதழ் யாரிடம் இருந்தது?
செல்வரத்தினம்: என்னிடம் இருந்தது.
வழக்கறிஞர் ஜீ.கே: டெலிவரி நோட்டுடன் வாகனத்தின் பதிவு சான்றிதழையும் கொடுத்துவிடுவீர்களா?
செல்வரத்தினம்: ஆமாம். அது இல்லாமல் வாகனத்தை எடுத்துச் செல்ல இயலாது.
வழக்கறிஞர் ஜீ.கே: (ஆவணத்தைக் காட்டி...)டெலிவரி நோட்டில் வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவை எழுதப்படவில்லை. கனகராஜ் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக யுவராஜை தெரியுமா?
செல்வரத்தினம்: தெரியாது.
வழக்கறிஞர் ஜீ.கே: கனகராஜ் உங்களை யுவராஜிடம் அறிமுகப்படுத்தியதாகவும், டெலிவரி நோட்டை நீங்கள் தான் எழுதினீர்கள் என்றும் காவல்துறை விசாரித்தபோது நீங்கள் கூறினீர்களா?
செல்வரத்தினம்: காவல்துறை அதுபற்றி கேட்கவில்லை.
வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறை விசாரிக்கும் வரை வேறு யாரிடமாவது கூறினார்களா?
செல்வரத்தினம்: இல்லை.
வழக்கறிஞர் ஜீ.கே: நீங்கள் புரோக்கராக இருந்து வாகனம் விற்கவில்லை. காவல்துறையினர் நிர்பந்தத்தின் பேரில் காவல்துறையினரின் தயவு தேவைப்படும் என்பதால் உங்களை இந்த வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளார்கள்.
செல்வரத்தினம்: இல்லை. 

சாட்சி எண்: 24
பெயர்: ரமேஷ்குமார் ( யுவராஜ் காரின் முன்னாள் உரிமையாளர்)

வழக்கறிஞர் கருணாநிதி: நீங்க எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்யறீங்க?
ரமேஷ்குமார்: நான் பொள்ளாச்சியில் குடியிருக்கிறேன். நான் மர வியாபாரம் செய்கிறேன்.
வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களைத் தெரியுமா?
ரமேஷ்குமார்: ( கூண்டில் நிற்பவர்களைப் பார்த்து விட்டு...) யுவராஜை தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி:இந்த வழக்கு சம்பந்தமாக சொல்லுங்கள்...
ரமேஷ்குமார்: வெள்ளை நிற டாட்டா சஃபாரி டி.என்.41 எஸ் 1564 என்ற காரை நான் 2008ம் வருடத்தில் திரிசூர் டிம்பர்ஸ் என்ற என் நிறுவனத்தின் பேரில் வாங்கினேன். நான் காரை இரண்டு வருடங்கள் ஓட்டினேன். அதன் பிறகு வேறு வண்டி வாங்கலாம் என்பதற்காக இந்த காரை விற்பதற்கு புரோக்கர் செல்வி என்கிற செல்வரத்தினம் மூலம் விற்பதற்கு ஏற்பாடு செய்தேன். 
12.12.2010ம் தேதியன்று யுவராஜ், கனகராஜ், செல்வரத்தினம் ஆகியோர் வந்து என் காரை பார்த்தார்கள். பிறகு 13.12.2010ம் தேதியன்று மாலை 7:00 மணிக்கு மூவரும் வந்து என் சஃபாரி காரை விலை பேசினார்கள். ரூ 5 லட்சத்திற்கு  விலை பேசினோம். யுவராஜ் பணத்தை கொடுத்தார். அதற்கான ரசீதை யுவராஜ் மனைவி சுவிதாவின் பேரில் ரசீது போடச்சொன்னார். வாகனத்தைப் பெற்றுக்கொண்டதற்கான டெலிவரி நோட்டில் யுவராஜ் கையெழுத்து  போட்டார். 
வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணத்தைக் கொடுத்து...) இந்த நோட்டு தானா?
ரமேஷ்குமார்: ஆமாம். ஒரு கையெழுத்து வாகனத்தைப் பெற்றுக்கொண்டதற்காகவும், மற்றொரு கையெழுத்து டெலிவரி நோட்டில் உள்ள திருத்தத்திற்காக  போட்டார். 
வழக்கறிஞர் கருணாநிதி: ( ஆவணங்களை நீதிபதியிடம் காட்டி குறியீடு செய்யப்படுகிறது...)
ரமேஷ்குமார்: என் சஃபாரி காரை யுவராஜிற்கு விற்ற பிறகு வாகனத்தைக் கொடுத்ததற்காக யுவராஜிடம் இருந்து டெலிவரி நோட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டு யுவராஜிடம் பதிவு சான்றிதழ், பெயர் மாற்றம் செய்வதற்கான படிவம் ஆகியவற்றைக் கொடுத்து விட்டேன். காரை எடுத்துச் செல்லும் போது 10, 15 நாட்களில் பெயர் மாற்றம் செய்வதாக கூறினார்கள். 
வழக்கறிஞர் கருணாநிதி: வாகனத்தின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்தார்களா?
ரமேஷ்குமார்:  அதுபற்றி எனக்குத் தெரியாது.
வழக்கறிஞர் கருணாநிதி: இது சம்பந்தமாக காவல்துறையினர் விசாரித்தார்களா?
ரமேஷ்குமார்: விசாரித்தார்கள்.

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜீ.கே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ ரமேஷ்குமாரிடம் குறுக்கு விசாரணை செய்தார்...
வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் வாகனத்தை விற்றதைப் பற்றி உங்களிடம் விசாரித்தார்களா?
ரமேஷ்குமார்: தொலைப்பேசி மூலம் விசாரித்தார்கள்.
வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் உங்களை விசாரித்தபோது வாகனத்தை விற்றதற்கான ஆவணங்கள் உங்களிடம் இருந்ததைச் சொன்னீர்களா?
ரமேஷ்குமார்: சொன்னேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: சி.பி.சி.ஐ.டி போலீஸார் உங்களை எங்கு விசாரித்தார்கள்?
ரமேஷ்குமார்: சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரித்தார்கள்.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தை விற்றீர்களா என்று உங்களிடம் கேட்டார்களா?
ரமேஷ்குமார்: கேட்டார்கள்.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தை விற்பதற்காக ஒப்பந்தம் எதுவும் போடப்பட்டதா?
ரமேஷ்குமார்: இல்லை.
வழக்கறிஞர் ஜீ.கே: பொதுவாக ஒரு வாகனத்தை விற்கும்போது டெலிவரி நோட் வாங்கப்படும். அந்த டெலிவரி நோட்டில் வாகனத்தின் விலையும் குறிப்பிடப்படும்.
ரமேஷ்குமார்: ஆமாம்.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தின் பதிவு சான்றிதழ் யாரிடம் இருந்தது?
ரமேஷ்குமார்: என்னிடம் இருந்தது.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தின் பதிவு சான்றிதழில் வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவை குறிப்பிட வேண்டும். 
ரமேஷ்குமார்: விற்றவுடன் வாகனத்தின் பதிவு சான்றிதழின் அசலை நான் கொடுத்து விட்டேன். பெயர் மாற்றுவதற்கான படிவத்தையும் கொடுத்து விட்டேன். 
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தின் பெயர் மாற்றுவதற்கான படிவத்தில் வாகனத்தின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர் ஆகியவை எழுதப்பட வேண்டும். வாகனத்தின் பெயர் மாற்றுவதற்கான படிவத்துடன் வாகனத்தின் பதிவு சான்றிதழையும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்தால் தான் வாகனத்தைப் பெயர் மாற்றம் செய்வார்கள். வாகனத்தை விற்ற 10 நாட்களுக்குள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், வாகனத்தின் காப்பீட்டு நிறுவனத்திற்கும் வாகனத்தை விற்றதைப் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தெரியுமா?
ரமேஷ்குமார்: தெரியாது. 
வழக்கறிஞர் ஜீ.கே: வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், வாகனத்தின் காப்பீட்டு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதா?
ரமேஷ்குமார்: இல்லை.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்திற்கு இரண்டு முறையில் வரி செலுத்த வேண்டும் நீங்கள் எந்த முறையில் வரி கட்டினீர்கள்?
ரமேஷ்குமார்: ஆயுட்கால வரி கட்டியுள்ளேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: வாகனத்தின் காப்பீட்டில் பெயர் மாற்றம் நீங்கள் செய்தீர்களா?
ரமேஷ்குமார்: நான் செய்யவில்லை. படிவத்தில் மட்டும் கையெழுத்து  போட்டுக் கொடுத்தேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் விசாரித்த போது ஆவணங்களைக் கொடுத்தீர்களா?
ரமேஷ்குமார்: கொடுத்தேன். காவல்துறையினர் கையெழுத்துகளை பார்த்து எதற்காகப் போடப்பட்டது என்று விசாரித்தார்கள். விவரத்தைக் கூறினேன்.
வழக்கறிஞர் ஜீ.கே: நீங்கள் கூறுவதை போல எந்த விற்பனையும் நடைபெறவில்லை. வாகனத்தின் பதிவு சான்றிதழ், வாகனத்தின் காப்பீடு ஆகியவை இல்லை. காரை நீங்கள் விற்கவில்லை. சி.பி.சி.ஐ.டி காவல் துறையினரின் தூண்டுதலின் பேரில் மேற்படி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது?
ரமேஷ்குமார்: இல்லை.

சாட்சி எண்: 25
பெயர்: கண்ணன்  (மோட்டார் வாகன ஆய்வாளர்)

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள். 
கண்ணன்: நான் தற்போது பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் ஓமலூர் பகுதி அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்த போது நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.30 ஏஎக்ஸ் 6169என்ற வாகனத்தின் பி ரெஜிஸ்டர் ஆவணத்தின் நகலை சான்றிட்டு 5.10.2015ம் தேதியன்று நாமக்கல் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு நான் கடிதம் மூலம் அனுப்பி வைத்தேன். (அந்த கடிதம் குறியீடு செய்யப்படுகிறது.)  அந்த வாகன நம்பரின் உரிமையாளர் ராமச்சந்திரன் த/பெ ராஜேந்திரன். இது குறித்து என்னை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் விசாரித்தார்கள். 

சாட்சி எண்: 26
பெயர்: சீனிவாசன்  (ஜவுளிக்கடைக்காரர்)

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கிறீர்கள்? என்ன தொழில் செய்கிறீர்கள்?
சீனிவாசன்: நான் ஓமலூரில் குடியிருக்கிறேன். நான் ஜவுளிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். 
வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜை உங்களுக்குத் தெரியுமா?
சீனிவாசன்: தெரியும். 
வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வனை தெரியுமா?
சீனிவாசன்: தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்கள்...
சீனிவாசன்: 24.6.2015ம் தேதியன்று காலை கலைச்செல்வன் எனக்கு போன் செய்தார். நான் தூங்கிக்கொண்டிருந்தேன். இரண்டு, மூன்று முறை எனக்கு போன் செய்துள்ளார். அதன் பிறகு மீண்டும் எனக்கு போன் செய்தார். நான் போனை எடுத்து பேசிய போது கோகுல்ராஜ் அம்மா சித்ராவும், கலைச்செல்வனும் என்னிடம் போனில் பேசினார்கள். 
கோகுல்ராஜை பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்டார்கள். நான் கோகுல்ராஜை பார்க்கவில்லை. என்று கூறினேன். அதன் பிறகு அரை மணி நேரத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் நானும் என் மனைவியும் கோகுல்ராஜின் வீட்டிற்கு சென்றோம். அங்கு கோகுல்ராஜின் தாயார் மற்றும் உறவினர்கள் அழுது கொண்டிருந்தார்கள். 
அதன் பிறகு கோகுல்ராஜின் நண்பர்களுக்கு போன் செய்து பேசினார்கள். அப்போது கலைச்செல்வன் என் போனை கேட்டார். என் போனை வாங்கி இரண்டு மூன்று போன் செய்தார். அப்போது ஸ்வாதி என்ற பெண் பேசுகிறார். என கூறி கலைச்செல்வன் ஸ்பீக்கரை ஆன் செய்து அதனை அனைவரும் கேட்கும்படி கூறினார். அப்போது நானும் உடன் இருந்தேன். 
கோகுல்ராஜ் அங்கு வந்தாரா, நீங்கள் பார்த்தீர்களா என்று கலைச்செல்வன் ஸ்வாதியிடம் கேட்டார். அதற்கு நேற்று காலை கோகுல்ராஜ் வந்ததாகவும், அவர் செல்போன் வாங்குவதற்குக் காசு வேண்டும் என்று கேட்டதாகவும்,  ஸ்வாதி கோகுல்ராஜிடம் பணம் கொடுத்தாகவும், ஸ்வாதி மேலே கோயிலுக்கு சாமி கும்பிட சென்றதாகவும், அதன் பிறகு சாமி கும்பிட்டுவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது ஆறு,ஏழு நபர்கள் வந்து கோகுல்ராஜை அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு ஸ்வாதியை இரண்டு நபர்கள் அழைத்துச் சென்றதாகவும் ஸ்வாதி போனில் கலைச்செல்வனிடம் கூறியதை நான் கேட்டேன். 
ஸ்வாதி கோயிலை விட்டு கீழே வந்த போது காரில் நிறைய நபர்கள் இருந்தார்கள் என்றும் அப்போது ஸ்வாதி தன்னுடைய செல்போனை கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு அந்த நபர் மாலை வீட்டிற்கு வந்து கொடுத்து விடுவதாக கூறியதாகச் சொன்னார்கள். கலைச்செல்வன் காரின் விபரத்தை கேட்டதற்கு, கார் வெள்ளை நிற பெரிய கார். அதன் பின்புறத்தில் தீரன்சின்னமலை என்று எழுதியிருந்ததாகவும், அது என்ன வகையான கார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஸ்வாதி கலைச்செல்வனிடம் போனில் கூறினார். அதன் பிறகு அவர்கள் திருச்செங்கோடு சென்றுவிட்டார்கள். நான் வீட்டிற்குச் சென்று விட்டேன். 
பிறகு 20.12.2015ம் தேதியன்று சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வந்து வழக்கை பற்றி விசாரித்து, என்னுடைய செல்போன் மற்றும் மெமரிகார்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டார்கள். அப்போது என்னுடைய வெள்ளை நிற சேம்சாங் செல்போனை காவல் துறையினரிடம் ஒப்படைத்தேன். 
வழக்கறிஞர் கருணாநிதி: ( வெள்ளை நிற சாம்சாங் போனைக் காட்டி...) இது தான் உங்க செல்போனா?
சீனிவாசன்: ஆமாம். 
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த செல்போன் நம்பர் தெரியுமா?
சீனிவாசன்: தெரியும். ( செல்போன் நம்பரை சொன்னார்)
வழக்கறிஞர் கருணாநிதி: கலைச்செல்வன் பேனில் பேசிய உரையாடலை யாருடைய போனில் பதிவு சென்றார்?
சீனிவாசன்: என்னுடைய போனில் பதிவு செய்தார்.
வழக்கறிஞர் கருணாநிதி: யுவராஜ் அழைத்ததாக ஸ்வாதி கூறினாரா?
சீனிவாசன்: கூறினார். 
வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கைப்பற்றி வேறு ஏதாவது தெரியுமா?
சீனிவாசன்: தெரியாது.
வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜை உங்களுக்குத் தெரியுமா?
சீனிவாசன்: தெரியும்.
வழக்கறிஞர் கருணாநிதி: சி.சி.டி.வி புட்டேஜ் பார்த்தால் உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
சீனிவாசன்: அடையாளம் காட்ட முடியும்.
அதையடுத்து திருச்செங்கோடு மலைக்கோயிலில் சி.சி.டி.வி வீடியோவில் பதிவாகியுள்ள வீடியோ நீதிமன்ற சுவரில் திரையிடப்பட்டது. அதை கூண்டுக்குள் நின்று உற்றுப் பார்த்த சீனிவாசன் கையை நீட்டி, ''அந்த பெண்ணுக்கு அருகில் ஊதா நிற சட்டை அணிந்து செல்லும் நபர் கோகுல்ராஜ்'' என்று அடையாளம் காட்டினார்.

 

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜீ.கே என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ சீனிவாசனை குறுக்கு விசாரணை செய்தார்...

 

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறை உங்களை எத்தனை முறை விசாரித்தார்கள்?

சீனிவாசன்: ஒரு முறை விசாரித்தார்கள்.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறை விசாரிப்பதற்கு முன்பு இந்த விபரங்களை வேறு யாரிடமாவது கூறினீர்களா?

சீனிவாசன்: யாரிடமும் கூறவில்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறை உங்களுக்கு சம்மன் கொடுத்து விசாரித்தார்களா?

சீனிவாசன்: சம்மன் கொடுக்கவில்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: பிறகு எப்படி காவல்துறையினர் உங்களை வந்து விசாரித்தார்கள்? 

சீனிவாசன்: நேரில் என் வீட்டிற்கு வந்து விசாரித்தார்கள்.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினரோடு கலைச்செல்வனும் வந்தாரா?

சீனிவாசன்: ஞாபகம் இல்லை. 

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் உங்களை விசாரித்தபோது எத்தனை மணி இருக்கும்?

சீனிவாசன்: ஞாபகம் இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல் துறையினர் உங்களிடம் என்னென்ன பொருள்கள் வாங்கினார்கள்?

சீனிவாசன்: செல்போன் மற்றும் மெமரி கார்டு வாங்கினார்கள்.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் உங்களிடம் கைப்பற்றிய செல்போன் மற்றும் மெமரி கார்டு உங்களிடம் கைப்பற்றுதல் மகஜர் தயார் செய்து கையெழுத்து வாங்கினார்களா?

சீனிவாசன்: ஞாபகம் இல்லை. கையெழுத்து போடவில்லை. 

வழக்கறிஞர் ஜீ.கே: செல்போனும், மெமரிகார்டும் காவல்துறையினர் கைப்பற்றியபோது உங்கள் தெரு நபர்கள் யாராவது இருந்தார்களா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினருடன் தனி நபர்கள் யாராவது வந்தார்களா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: செல்போன், மெமரிகார்டு கைப்பற்றும்போது உங்க வீட்டில் மனைவி, மகன்கள் இருந்தார்களா?

சீனிவாசன்: இல்லை. என் மனைவி கடையில் இருந்தார். நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன்.

வழக்கறிஞர் ஜீ.கே: உங்கள் மகனும், கோகுல்ராஜூம் நண்பர்களா?

சீனிவாசன்: என் மகனும் கோகுல்ராஜூம் 1 வகுப்பு முதல் 10 வகுப்பு வரை ஒன்றாக படித்தார்கள். 

வழக்கறிஞர் ஜீ.கே: கோகுல்ராஜ் உங்க கடைக்கு வருவாரா?

சீனிவாசன்: வருவார்.

வழக்கறிஞர் ஜீ.கே: கோகுல்ராஜ் உங்களுக்கு எப்படி பழக்கம்?

சீனிவாசன்: கோகுல்ராஜூம் என் மகனும் ஒன்றாக படித்ததால் கோகுல்ராஜ் எனக்கு பழக்கமானார்.

வழக்கறிஞர் ஜீ.கே: உங்க மகனுக்கு என்ன வயசு இருக்கும்?

சீனிவாசன்: என் மகனுக்கு 25 வயதிருக்கும்.

வழக்கறிஞர் ஜீ.கே: கலைச்செல்வன் உங்களுக்கு போன் செய்யும் போது உங்க மகன்கள் வீட்டில் இருந்தார்களா?

சீனிவாசன்: வீட்டில் இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: உங்க மகன்களை காவல்துறையினர் விசாரித்தார்களா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: உங்க மகன்களுக்கும் கோகுல்ராஜூக்கும் கொடுக்கல், வாங்கல் பழக்கம் இருந்ததா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: கோகுல்ராஜுக்கும் உங்கள் மகன்களுக்கும் கொடுக்கல், வாங்கல் உண்டு. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் உங்கள் மகன்களைக் காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தார்கள்?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: நிர்பந்தத்தின் பேரில் காவல்துறையினர் சொல்லிக் கொடுத்து நீங்கள் சாட்சியம் அளிக்கிறீர்கள்?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: சி.சி.டி.வி காட்சியை இன்று நீதிமன்றத்தில்தான் பார்க்கிறீர்களா?

சீனிவாசன்: ஆமாம்.

வழக்கறிஞர் ஜீ.கே: இதற்கு முன்பு சி.சி.டி.வி காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

சீனிவாசன்: இல்லை. 

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் விசாரித்த போது கோகுல்ராஜையும், சி.சி.டி.வி காட்சியையும் காட்டி விசாரித்தார்களா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறை விசாரித்த போது உங்க செல்போன் நம்பரை கூறினீர்களா?

சீனிவாசன்: விசாரிக்கும்  போது கூறவில்லை. என் செல்போனை வாங்கும்போது செல் நம்பரைக் கூறினேன். 

வழக்கறிஞர் ஜீ.கே: கலைச்செல்வன் உங்களுடைய செல்போனை வாங்கிதான் பேசினார். அதைதான் நீங்க கேட்டிருக்கீங்க. செல்போனில் அவர்கள் பேசியதைப் பக்கத்தில் இருந்து கேட்ட விவரங்களைதான் சாட்சியாக அளித்திருக்கிறீர்கள். அவ்வாறு பேசிய விவரங்களை எழுத்து மூலமாக எதுவும் குறித்திருக்கிறீர்களா?

சீனிவாசன்: இல்லை. 

வழக்கறிஞர் ஜீ.கே: பிறகு காவல்துறை விசாரித்தபோது எப்படி சரியாகச் சொன்னீர்கள்?

சீனிவாசன்: ஞாபகத்தில் இருந்த விவரங்களைதான் கூறினேன்.

வழக்கறிஞர் ஜீ.கே: காலையில் கோகுல்ராஜ் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் எப்போது புறப்பட்டுச் சென்றீர்கள்?

சீனிவாசன்:  9 மணிக்கு என் வீட்டிற்கு சென்றேன். 

வழக்கறிஞர் ஜீ.கே: அதுவரை உங்க மனைவி உங்களோடுதான் இருந்தாரா?

சீனிவாசன்: கலைச்செல்வன் வீட்டிற்கு சென்றபோது என் மனைவி என்னுடன் கலைச்செல்வன் வீட்டிற்கு வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து கடையை திறப்பதற்காக என் மனைவி கடைக்குச் சென்று விட்டார். 

வழக்கறிஞர் ஜீ.கே: உங்கள் மகன்களிடம் இந்த சம்பவத்தைப் பற்றி ஏதாவது கேட்டிருக்கிறீர்களா?

சீனிவாசன்: எதுவும் கேட்டதில்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: "கோகுல்ராஜ் அங்கு வந்தாரா? நீங்கள் பார்த்தீர்களா?" என்று கலைச்செல்வன் ஸ்வாதியிடம் போனில் கேட்டார் என்ற விவரத்தைக் காவல்துறையினரிடம் கூறினீர்களா?

சீனிவாசன்: கூறினேன்.

வழக்கறிஞர் ஜீ.கே: கலைச்செல்வன் காரின் விவரத்தைக் கேட்டதற்கு கார் வெள்ளை நிற பெரிய கார் என்றும் அதன் பின்புறத்தில் தீரன்சின்னமலை என்று எழுதியிருந்தது என்றும், அது என்ன வகையான கார் என்று தனக்குத் தெரியவில்லை என்றும் ஸ்வாதி கலைச்செல்வனிடம் போனில் கூறினார். என்ற விவரத்தை காவல் துறையினர் விசாரித்தபோது கூறினீர்களா?

சீனிவாசன்: ஞாபகம் இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: நீங்க கூறுவது போல் நீங்கள் கலைச்செல்வன் வீட்டிற்கு செல்லவில்லை. அங்கு கலைச்செல்வன் போனில் பேசியதை நீங்கள் கேட்கவில்லை. காவல்துறையினர் உங்களிடம் செல்போன், மெமரி கார்டு எதையும் கைப்பற்றவில்லை என்கிறேன்?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: செல்போன் வாங்கியதற்கான பில் இருக்கிறதா?

சீனிவாசன்: வாங்கியதற்கான பில் உள்ளது. 

வழக்கறிஞர் ஜீ.கே: செல்போன் வாங்கியதற்கான பில்லையும், சிம் வாங்கியதற்கான பில்லையும் காவல்துறையினர் உங்களிடம் வாங்கினார்களா?

சீனிவாசன்: இல்லை.

வழக்கறிஞர் ஜீ.கே: (வெள்ளை நிற சாம்சாங் செல்போனை காட்டி...) இந்த செல்போனை போல எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம்?

சீனிவாசன்: இந்த செல்போன் வாங்கியதற்கான பில் என்னிடம் உள்ளது. 

 

சாட்சி எண்: 27

பெயர்: கெளரிசங்கர்  ( ஸ்டிக்கர் கடை ஊழியர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்யறீங்க? 

கெளரிசங்கர்: நான் சங்ககிரி, நல்லப்பநாய்க்கன் தெருவில் குடியிருக்கிறேன். ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஸ்டிக்கர் கடையில் நான் தொழிலாளியாக வேலைபார்க்கிறேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களைத் தெரியுமா?

கெளரிசங்கர்: தெரியாது.

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கை பற்றியாவது ஏதாவது தெரியுமா?

கெளரிசங்கர்: எனக்கு எதுவும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறையினர் உங்களை விசாரித்தார்களா?

கெளரிசங்கர்: விசாரித்தார்கள்.

வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக இதற்கு முன்பாக நீங்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளீர்களா?

கெளரிசங்கர்: கொடுத்திருக்கிறேன்.

வழக்கறிஞர் கருணாநிதி: நீங்க கொடுத்த வாக்குமூலத்தைதான் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில் பதிவு செய்தார்கள்?

கெளரிசங்கர்: ஆமாம்.

வழக்கறிஞர் கருணாநிதி:  (ஆவணங்களைக் காட்டி...) இதெல்லாம் உங்களுடைய கையெழுத்தா?

கெளரிசங்கர்: ஆவணங்களை பார்த்து அனைத்தும் என்னுடைய கையெழுத்து தான்.

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015ம் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான பிளெக்ஸ் பிரின்ட் கடையில் வேலை செய்வதாகக் காவல்துறையினர் விசாரித்தபோது கூறினீர்களா?

கெளரிசங்கர்: ஆமாம்.

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015ம் தேதியன்று யுவராஜ் என்பவர் எம்.எம்.540 என்ற ஜீப்பை கடையின் பின்புறம் நிறுத்தி, அதற்கு ஸ்டிக்கர் ஒட்டச் சொன்னாரா?

கெளரிசங்கர்: எனக்கு ஞாபகம் இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: யுவராஜ் ஆர்.சி புக்கை வீட்டில் வைத்து விட்டு வந்துவிட்டேன். டி.என்.30 ஏஎக்ஸ்6169 என்ற எண்ணை ஒட்டச் சொன்னார்?

கெளரிசங்கர்: ஆர்.சி புக் இல்லாமல் யாருக்கும் வாகனத்திற்கு நம்பர் ஒட்டமாட்டோம். 

வழக்கறிஞர் நாராயணன்: யுவராஜ் ஆர்.சி புக்கை மறுநாள் கொண்டு வந்து தருவதாகக் கூறி டி.என் 30ஏஎக்ஸ் 6169 என்ற எண்ணை ஒட்டிச் சென்றுள்ளார். அதன் பிறகு காவல்துறையினர் மேற்சொன்ன டி.என்.30ஏஎக்ஸ் 6169 என்ற எண் உங்களால் ஒட்டப்பட்டதா என்று விசாரித்ததற்கு நீங்கள்தான் மேற்படி ஒட்டியதாகக் கூறியுள்ளீர்கள்?

கெளரிசங்கர்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: ஸ்டிக்கர் ஒட்டியதற்காக உங்களுக்கு 180 ரூபாய் கொடுத்தார்கள் தானே?

கெளரிசங்கர்: ஞாபகம் இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: ஸ்டிக்கர் ஒட்டியதற்காக 500 ரூபாய் தாளை கொடுத்ததற்கு நீங்கள் 180 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதியை யுவராஜிடம் கொடுத்துள்ளீர்கள்?

கெளரிசங்கர்: ஞாபகமில்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: நீங்கள் மேற்சொன்ன செயல்களை உங்கள் உரிமையாளர் ரமேஷிடம் கூறி மேற்படி பெற்ற தொகையை நீங்கள் உங்கள் உரிமையாளர் ரமேஷிடம் கொடுத்தீர்கள். 

கெளரிசங்கர்: நான் நிறைய வாகனங்களுக்கு  ஸ்டிக்கர் ஒட்டுவதால் ஞாபகம் இல்லை. 

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறை விசாரித்தபோது உண்மையைக் கூறிவிட்டு தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், எதிரிகளுக்கு பயந்தும் உண்மையை மறைத்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள். 

கெளரிசங்கர்: இல்லை.

 

சேரில் இருந்து திடுக்கென எழுந்த யுவராஜ் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ சாட்சி கெளரிசங்கரிடம் ...

வழக்கறிஞர் ஜீ.கே: நீங்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் தானே?

கெளரிசங்கர்: ஆமாம். நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவன்.

வழக்கறிஞர் ஜீ.கே: ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த தலைவர்கள், காவல்துறையினர் உங்களைப் பொய் சாட்சி சொல்லச் சொன்னார்களா?

கெளரிசங்கர்: (தயங்கியபடி...) ஆமாம்.

வழக்கறிஞர் ஜீ.கே: காவல்துறையினர் உங்களை அழைத்துச் சென்று எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்களா?

கெளரிசங்கர்: ஆமாம்.

வழக்கறிஞர் ஜீ.கே: ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த தலைவர்களுக்கு பயந்துகொண்டுதான் தற்போது ஞாபகம் இல்லை என்று சாட்சியம் அளித்துள்ளீர்கள்? 

கெளரிசங்கர்: எனக்கு ஞாபகம் இல்லாததால்தான் ஞாபகம் இல்லை என்று கூறினேன்.

 

சாட்சி எண்: 28

பெயர்: குமார்  ( டீக்கடை ஊழியர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்யறீங்க?

குமார்: நான் இளம்பிள்ளையில் குடியிருந்து, நெசவுத் தொழில் செய்து வருகிறேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களைத் தெரியுமா?

குமார்: (கூண்டில் நிற்பவர்களை பார்த்து...) யாரையும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த கோகுல்ராஜ் வழக்குப்பற்றி ஏதாவது தெரியுமா?

குமார்: எனக்கு எதுவும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: 2015ம் வருடம் என்ன தொழில் செய்தீர்கள்?

குமார்: என் மாமனார் டீக்கடைக்கு நான் வேலைக்கு செல்வேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: டீக்கடையில் என்னென்ன பொருள்கள் விற்கப்படும்?

குமார்: மளிகை சாமான்கள், பீடி, சிகரெட் விற்போம். 

வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறை உங்களை விசாரித்தார்களா?

குமார்: ஆம்.. விசாரித்தார்கள். 

( அப்போது யுவராஜ் சாட்சியைப் பார்த்து தலையாட்ட அதை பார்த்த நீதிபதி இளவழகன் கோபத்தோடு கூண்டில் நின்று கொண்டிருந்த யுவராஜைப் பார்த்து.... ''சும்மா இருக்க முடியலையா? அனைத்தும் வீடியோ பதிவாகிக் கொண்டிருக்கிறது. நீ என்ன பண்ணினேன்னு வீடியோவைப் போட்டு காட்டச் சொல்லட்டுமா'' என்றதற்கு யுவராஜ் வேண்டாம் என்றார். அதையடுத்து நீதிபதி இளவழகன், ''தலையை ஆட்டாமல் அமைதியா இரு'' என்றார். 

வழக்கறிஞர் கருணாநிதி: உங்க மாமனார் கடையில் பேப்பர், பேனா விற்பீர்களா?

குமார்: என் மாமனார் கடையில் பேப்பர் விற்பதில்லை. மார்க்கர் பேனா விற்போம். 

வழக்கறிஞர் நாராயணன்: உங்க மாமனார் கடை பெயர் என்ன?

குமார்: ஜெயசூர்யா காப்பி பார்.

வழக்கறிஞர் நாராயணன்: அந்த கடைக்கு பக்கத்தில் சண்முகா ஸ்டூடியோ இருக்கா?

குமார்: இருக்கு

வழக்கறிஞர் நாராயணன்: அந்த ஸ்டூடியோ செந்தில் என்பவருக்குச் சொந்தமானதுதானே?

குமார்: ஆமாம். 

வழக்கறிஞர் நாராயணன்: அந்தக் கடையில் அருண் என்ற நபர் கடைக்கு வந்து கிங்ஸ் சிகரெட் வாங்கி செல்வார்தானே?

குமார்: தெரியாது. 

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015 தேதியன்று நீங்கள் வழக்கம் போல் கடையில் வேலை செய்தீர்கள்?

குமார்: ஞாபகம் இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: அன்று மாலை 6 மணிக்கு மேல் மேற்படி போட்டோ ஸ்டூடியோவில் இருந்து அருண் உங்க மாமனார் கடைக்கு வந்து உங்களிடம் இரண்டு பால்பாயின்ட் பேனா வாங்கிச் சென்றார். அதற்கு 10 ரூபாய் கொடுத்தார். அதற்கு நீங்கள், 'எப்போதும் சிகரெட் தானே வாங்குவீர்கள். ஏன் பேனா வாங்கிச் செல்கிறீர்கள்.' என்று அருணிடம் கேட்டிருக்கிறீர்கள். 18.10.2015 தேதியன்று சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அருணை அழைத்து வந்த போது உங்கள் கடையை அடையாளம் காண்பித்து இங்குதான் பேனா வாங்கினேன். என்று கூறினார். அப்போது நீங்கள் நடந்த விவரங்களை காவல்துறையினரிடம் கூறினீர்கள்?

குமார்: எனக்கு எதுவும் தெரியாது என்றுதான் காவல்துறை விசாரித்தபோது கூறினேன். 

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறையினர் விசாரித்தபோது உண்மையை கூறிவிட்டு தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் எதிரிகளுக்கு பயந்தும் உண்மையை மறைத்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள்?

குமார்: இல்லை.

 

சாட்சி எண்: 29

பெயர்: தினேஷ்குமார்  ( செல்போன் கடைக்காரர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்கிறீர்கள்?

தினேஷ்குமார்: நான் மஞ்சகல்பட்டியில் குடியிருக்கிறேன். நான் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: செல்போன் கடை வைத்திருக்கீங்களா?

தினேஷ்குமார்: ஆமாம். அலுவலகத்திலேயே நான் செல்போன் கடை நடத்தி வருகிறேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களை தெரியுமா?

தினேஷ்குமார்: (அவர்களைப் பார்த்து...) யாரையும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: உங்க செல்போன் கடையில் என்ன விற்பீர்கள்?

தினேஷ்குமார்: செல்போன்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை விற்கிறோம்.

வழக்கறிஞர் கருணாநிதி: இது என்ன வழக்குன்னு தெரியுமா?

தினேஷ்குமார்: தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறையினர் உங்களை விசாரித்தார்களா?

தினேஷ்குமார்: விசாரிக்கவில்லை.

வழக்கறிஞர் நாராயணன்: 24. 6.2015 தேதியன்று காலை இரண்டு புதிய டிரான்ஸன்ட் 2ஜி.பி மெமரி கார்டுகள் 360 ரூபாய் பணம் கொடுத்து அருண் வாங்கிச் சென்றுள்ளார்?

தினேஷ்குமார்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: ( மெமரி கார்டுகளைக் காட்டி...) இந்த மெமரி கார்டுகள் வாங்கிச் சென்றார்கள்?

தினேஷ்குமார்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: உங்க கடைக்கு வந்து மெமரி கார்டுகளை அருண் வாங்கிச் சென்றுள்ளார். அதை காவல்துறை விசாரித்தபோது உண்மையைக் கூறிவிட்டு தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், எதிர்களுக்கு பயந்தும் உண்மையை மறைத்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள்?

தினேஷ்குமார்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: 18.10.2015ம் தேதியன்று சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் அருணை உங்க கடைக்கு அழைத்து வந்தார்கள். அருண் மெமரி கார்டுகளை உங்கள் கடையில்தான் வாங்கிச் சென்றதாகக் கூறி இருக்கிறார்?

தினேஷ்குமார்: அப்படி யாரும் வரவில்லை.

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறையினர் விசாரித்தபோது உண்மையைக் கூறிவிட்டு தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், எதிர்களுக்கு பயந்தும் உண்மையை மறைத்து பொய்யாக சாட்சியம் அளிக்கிறீர்கள்?

தினேஷ்குமார்: இல்லை.

 

சாட்சி எண்: 30

பெயர்: பாலகிருஷ்ணன் ( டெலிபோன் பூத் வைத்திருப்பவர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: எங்க குடியிருக்கீங்க? என்ன தொழில் செய்யறீங்க?

பாலகிருஷ்ணன்: நான் பரமசிவன்கவுண்டம்பாளையத்தில் குடியிருக்கிறேன். கே.எஸ்.ஆர் கல்லூரி அருகில் டீ கடை நடத்தி வருகிறேன்.

வழக்கறிஞர் கருணாநிதி: டெலிபோன் பூத் வைத்திருக்கீங்களா?

பாலகிருஷ்ணன்: ஆமாம். பி.சி.ஓ டெலிபோன் பூத் வைத்திருக்கிறேன்.

வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரைக் காட்டி...) இவர்களைத் தெரியுமா?

பாலகிருஷ்ணன்: (அவர்களைப் பார்த்து...) யாரையும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கை பற்றியாவது ஏதாவது தெரியுமா?

பாலகிருஷ்ணன்: இந்த வழக்கைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: காவல்துறையினர் உங்களை விசாரித்தார்களா?

பாலகிருஷ்ணன்: விசாரிக்கவில்லை.

வழக்கறிஞர் கருணாநிதி: (ஆவணங்களைக் காட்டி...) சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்தபோது சங்கர் புகைப்படத்தை அடையாளம் காட்டி கீழே நீங்கள்தானே கையெழுத்துப் போட்டிருக்கிறீர்கள்?

பாலகிருஷ்ணன்: சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கையெழுத்து போடச் சொன்னதால் போட்டேன். 

வழக்கறிஞர் நாராயணன்: 23.6.2015ம் தேதியன்று இரவு 8:30 மணிக்கு ஒரு நபர் கையில் ஒரு கருப்பு நிற செல்போனுடன் உங்க பி.சி.ஓவில் போன் செய்ய வந்தார். நீங்களே கையில் போன் வைத்துள்ளீர்கள் ஏன் பூத்தில் போன் செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்டதற்கு தன்னுடைய போன் ரிப்பேர் என்று கூறி உங்க பி.சி.ஓவில் போன் பேசிவிட்டு அதற்காக ஒரு ரூபாய் கொடுத்தார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அதே நபர் மீண்டும் வந்து ஒரு போன் செய்து விட்டு அதற்கு ஒரு ரூபாய் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.

பாலகிருஷ்ணன்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: அதன் பிறகு 6.11.2015ம் தேதியன்று சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் பல புகைப்படங்களைக் காண்பித்து உங்களை விசாரித்தபோது நீங்கள் சங்கரின் கலர் ஜெராக்ஸ் புகைப்படத்தை பார்த்து அவர் தான் உங்கள் கடையில் வந்து போன் செய்து விட்டு போனார் என்று அடையாளம் காண்பித்திருக்கிறீர்கள்?

பாலகிருஷ்ணன்: இல்லை.

வழக்கறிஞர் நாராயணன்: காவல்துறையினர் விசாரித்த போது உண்மையை கூறி விட்டு தற்போது எதிரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், எதிரிகளுக்கு பயந்தும் உண்மையை மறைத்து பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள்.

பாலகிருஷ்ணன்: இல்லை.

 

சாட்சி எண்: 31

பெயர்: ரமேஷ்  (ஸ்டிக்கர் கடை உரிமையாளர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: நீங்க எங்கிருந்து வந்திருக்கீங்க? என்ன தொழில் பண்றீங்க?

ரமேஷ்: நான் சங்ககிரியில் இருந்து வந்திருக்கேன். வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை வைத்து தொழில் செய்து வருகிறேன். 

வழக்கறிஞர் கருணாநிதி: உங்கக் கடையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். 

ரமேஷ்: நான், கெளரிசங்கர் உட்பட 5 பேர் வேலை செய்கிறோம். 

வழக்கறிஞர் கருணாநிதி: (கூண்டில் நிற்கும் யுவராஜ் உட்பட 15 பேரை காட்டி...) இவர்களைத் தெரியுமா?

ரமேஷ்: (அவர்களைப் பார்த்து...) யுவராஜை தெரியும். 

வழக்கறிஞர் கருணாநிதி: யுவராஜ் என்ன வண்டி வைத்திருக்கிறார் என்று தெரியுமா?

ரமேஷ்: தெரியாது. 

வழக்கறிஞர் கருணாநிதி: கோகுல்ராஜ் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை உன்னை விசாரித்தார்களா?

ரமேஷ்: என் கடையில் வேலை பார்க்கும் கெளரிசங்கரை விசாரித்தார்கள். அப்போது என்னிடமும் விசாரித்தார்கள். 

குறுக்கு விசாரணை இல்லை...

 

சாட்சி எண்: 32

பெயர்: பாஷ்யம்  (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்)

 

வழக்கறிஞர் கருணாநிதி: இந்த வழக்கு சம்பந்தமாக தெரிந்ததைச் சொல்லுங்கள்...

பாஷ்யம்: நான் தற்போது சேலம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறேன். 2015ம் ஆண்டு சேலம் மாவட்டம் தேவூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தேன். இங்கு இருப்பவர்களில் யுவராஜ், அவர் கார் டிரைவர் அருண், யுவராஜின் சகோதரர் தங்கதுரை ஆகியோரை தெரியும்.

23.6.2015ம் தேதியன்று நான் சங்ககிரியில் பணியில் இருந்தபோது ஹெல்மெட் விழிப்புஉணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி சங்ககிரி பழைய பேருந்து நிலையம், சங்ககிரி காவல் நிலையம், தீரன்சின்னமலை மணி மண்டபம் வழியாகச் சென்று மீண்டும் சங்ககிரி காவல் நிலையத்தில் முடிவடைந்தது. 

அன்று மாலை சுமார் 4.45 மணிக்கு விழிப்புஉணர்வு பேரணி தொடங்கியது. நானும் பேரணியில் கலந்து கொள்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.கே சிட்டி மனை பிரிவு அருகில் நின்று கொண்டிருந்தபோது, பழைய பேருந்து நிலையத்தை நோக்கி ஒரு வெள்ளை நிற டாட்டா சஃபாரி வாகனம் ஒன்று எஸ்.கே சிட்டி மனை பிரிவு அருகில் வந்து நின்றது. அந்த காரை யுவராஜ் ஓட்டி வந்தார். எஸ்.கே சிட்டி மனை முன்பு நின்று கொண்டிருந்த தங்கதுரை அருகே நிறுத்தினார். 

அப்போது ''நம்ம ஜாதிக்கார பெண்ணிடம் கீழ் ஜாதிக்கார பையன் வாலாட்டுவதை நான் நேரில் பார்த்தேன். அந்த கீழ் ஜாதி மக்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும். என்னுடைய செல்லை நீ வைத்திரு. நான் என் வேலையை முடித்துவிட்டுவந்து வாங்கிக்கொள்கிறேன்'' என்று யுவராஜ் அவருடைய சகோதரர் தங்கதுரையிடம் கூறினார். 

வழக்கறிஞர் கருணாநிதி: அந்த வாகனத்தின் பின்புறத்தில் தீரன்சின்னமலை பேரவை என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததா?

பாஷ்யம்: நான் பார்த்த சமயத்தில் அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததா என்று நான் பார்க்கவில்லை. அங்கு 15 நிமிடங்கள் நின்று கொண்டிருந்தார்கள். அங்கிருந்து செல்லும்போது யுவராஜ் எனக்கு வணக்கம் வைத்து விட்டுச் சென்றார். நான் தலையாட்டிவிட்டு நின்றேன். 26.12.2015ம் தேதியன்று சி.பி.சி.ஐ.டி துறையின் ஏ.டி.எஸ்.பி அவர்கள் என்னை விசாரித்தார்கள். 

நீதிபதி: அந்த வெள்ளை நிற காரை காட்டினால் அடையாளம் காட்டுவீர்களா?

பாஷ்யம்: அடையாளம் காட்டுவேன்.

நீதிபதி: ( சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிருந்தாவை கூப்பிட்டு...) கார் எடுத்து வந்திருக்கீங்களா?

சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிருந்தா: எடுத்து வரவில்லை...

நீதிபதி: ஓ.கே (பாஷ்யத்தை பார்த்து...) வீடியோ போட்டால் அடையாளம் காட்டுவீர்களா?

பாஷ்யம்: அடையாளம் காட்டுவேன்.

நீதிபதி: வீடியோ ஒளிபரப்புங்கள்.

யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் அஜூ: (நீதிபதியைப் பார்த்து...) காவல்துறையிலேயே வீடியோவைப் பற்றி அவரிடம் எதுவும் சொல்லவில்லை. சி.சி.டி.வி வீடியோ ஒளிபரப்பு தேவையில்லை?

நீதிபதி: வீடியோ காட்சி தேவையா? தேவையில்லையா? என்பதை அப்புறம் முடிவு செய்யலாம். 

அதையடுத்து திருச்செங்கோடு மலைக்கோயிலில் கோகுல்ராஜூம், ஸ்வாதியும் வருவதைப் பதிவு செய்திருக்கும் கோவில் சி.சி.டி.வி ஃபுட்டேஜ் நீதிமன்றச் சுவரில் ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் கோகுல்ராஜூம், ஸ்வாதியும் தூரத்தில் இருந்து வரும்போதே இருவரையும் அடையாளம் காட்டியவர். அதே போல காக்கி பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து வரும் யுவராஜையும். யுவராஜிற்கு இடது புறத்தில் யுவராஜின் கார் டிரைவர் அருண் செல்வதையும் அடையாளம் காட்டினார்.

நீதிபதி: (யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூவைப் பார்த்து) இப்ப குறுக்கு விசாரணை செய்கிறீர்களா?

வழக்கறிஞர் ஜீ.கே: நேரம் வேண்டும்.

நீதிபதி: இவ்வழக்கை 9ம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன்.


டிரெண்டிங் @ விகடன்