வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:38 (08/11/2018)

``இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்” - பிறந்தநாளில் அறிவித்த கமல்

நம் நாட்டில் நடக்கும் அரசியலே சரியாக இல்லாதபோது நாம் பிற நாட்டில் நடக்கும் அரசியலைப் பற்றி பேசக் கூடாது என கமல் தெரிவித்துள்ளார். 

கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 64-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று தன் கட்சித் தொண்டர்களையும் ரசிகர்களையும் சந்தித்தார் கமல். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` இடைத்தேர்தல் வரும் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர கண்டிப்பாக வரும் எனச் சொல்ல முடியாது. அப்படி இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். சுகாதாரமான அரசியலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நான் இதுவரை பல இடங்களுக்குச் சென்றுள்ளேன் அந்த அனைத்து இடங்களிலும் இனி நாங்கள் ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என மக்கள் தெரிவிக்கின்றனர். அதை அவர்கள் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகிறேன். 

நாட்டை ஆள வேண்டிய கட்சி மக்கள் கட்சிதான். அவர்கள் நன்றாக இருந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கமாட்டேன். நம் நாட்டு அரசியலே சரியாக இல்லாதபோது மற்ற நாட்டு அரசியலைப் பற்றி நாம் பேசக்கூடாது. மக்கள் நல்ல தீர்ப்பைத் தருவார்கள். நிச்சயம் ஜனநாயகம் வெல்லும். நாங்கள் பிறரை திட்டிச் செய்யும் அரசியலை ஆரம்பத்திலிருந்தே செய்யவில்லை. எங்களைக் கடுமையாக எதிர்க்கும் கட்சிகளைக்கூட நாங்கள் மரியாதையாகத்தான் எதிர்க்கிறோம். நான் குழலோ ஊது குழலோ கிடையாது. நான் வெறும் கருவி அதுவும் மக்களின் கருவி எந்தக் கட்சியுடையதும் இல்லை. நாங்கள் எதிர்பார்த்ததைவிட தற்போது எங்கள் கட்சி அதிவேகமாக முன்னேறி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.