வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (07/11/2018)

கடைசி தொடர்பு:15:25 (07/11/2018)

`கட்டிக்காத்த மதிப்பு போய்விட்டதே!' - தீபாவளித் துணிகளை தைத்துதர முடியாத வேதனையில் டெய்லர் தற்கொலை

திருப்பூர் அருகே தீபாவளி புத்தாடைகளை உரிய நேரத்தில் தைத்து தரமுடியாமல் போனதால், மனமுடைந்த தையல் கலைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்துக்கொண்ட பத்மினி டெய்லர்

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி. இவர் தன் கணவரைப் பிரிந்து தாய் அம்பிகா மற்றும் 2 குழந்தைகளுடன் திருப்பூரில் வசித்து வந்தார். திருப்பூரில் உள்ள பாப்பண்ணா நகர் என்ற பகுதியில் கடந்த சில வருடங்களாக தையல் கடை நடத்தி வந்த பத்மினி, அப்பகுதியில் விரைவிலேயே தன் தொழிலால் மிகவும் பிரபலமடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலரும் பத்மினியின் ரெகுலர் வாடிக்கையாளர்களாக மாறும் அளவுக்கு நற்பெயரையும் பெற்றிருந்தார் பத்மினி. இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழக்கம்போல கடந்த சில மாதங்களாகவே பலரும் ஆடைகளை தைத்துத் தர பத்மினியை அணுகியிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் ஆர்டர்கள் அதிகளவு குவியவே, இரவு பகல் பாராமல் அதிகப்படியான நேரம் துணி தைப்பதற்காக உழைத்திருக்கிறார் பத்மினி. இருப்பினும் ஒப்புக்கொண்ட ஆர்டர்களை தீபாவளி தினத்துக்கு முன்பாக அவரால் முடிக்க முடியாமல் போயிருக்கிறது.

இதனால் அதிக வருத்தமடைந்த பத்மினி, இத்தனை ஆண்டுகளாக உள்ளூர் மக்களிடம் தான் பெற்றிருந்த நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாய் மனமுடைந்துபோய், வீட்டில் சாணிப் பவுடரை கரைத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். குறித்து தகவலறிந்த காவல்துறையினர், பத்மினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பத்மினியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.