வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (07/11/2018)

கடைசி தொடர்பு:14:59 (07/11/2018)

`சர்ச்சை காட்சியை நீக்குங்கள்!' - சர்காரை எச்சரித்த கடம்பூர் ராஜூ

`` 'சர்கார்' படத்தில் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லதல்ல" என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கடம்பூர் ராஜூ

`சர்கார்' திரைப்படத்தில் அ.இ.ம.மு.க. என்ற கட்சியின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் மாசிலாமணி என்ற பெயரில் பழ.கருப்பையா நடித்துள்ளார். இதில், மாசிலாமணியின் மகளாக கோமளவள்ளி என்ற பெயரில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலெட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். `இதில் அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்சி, கிரைண்டர்களை மக்கள் தீயில் போடுவதுபோல காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதில், கோமளவள்ளி என்பது மறைந்த முதல்வரின் இயற்பெயராகும். இதில் அரசு வழங்கிய இலவசப் பொருள்களை தீயில் போடுவது என்பது அரசை அவமதிக்கும் காட்சிகள்'  என அ.தி.மு.க-வினர் பரவலாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள  சிந்தலக்கரையில் விளாத்திகுளம் தொகுதியின் இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர்.ராஜூ, ``தகுதி நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றத் தீர்ப்பினால் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகள் மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் என மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகியுள்ள `சர்கார்' படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் படத்துக்காக அல்ல, இது அரசியல் ஆதாயத்துக்காக காண்பித்துள்ளனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லது கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். `சர்கார்' திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து அரசுக்குத் தகவல் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி அப்படிப்பட்ட காட்சிகள் இருக்கக்கூடாது, நீக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். அவங்களாக நீக்கிவிட்டால் நல்லது. இல்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க