வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (07/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (09/11/2018)

`உங்கள் படம் எங்களுக்கு ஆறுதலாக உள்ளது!’ -சர்காருக்கு மீனவர்கள் நன்றி

மீனவர்கள் படும் துன்பத்தை `சர்கார்' திரைப்படத்தின்மூலம் உணர்த்தியதால், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள். 

சர்கார்

இதுதொடர்பாக, ராமேஸ்வரம் பாரம்பர்ய மீனவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், `` மீனவர்கள், நாட்டுக்கு 50,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் பொருளாதார சக்தியாகவும், 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஆனால், மத்திய - மாநில அரசுகள் மீனவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கிறது. எனவே, மீனவர்களின் வாழ்வியலுக்காகக் கடலிலும், கரையிலும் படும் துன்பங்களை அரசு பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. 

மீனவர்கள் படும் துன்பங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதில் ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் திரைப்படம் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. அந்த வகையில், விஜய் நடிப்பில் வெளியான `சர்கார்' திரைப்படத்தில், விஜய் தான் மீனவன் என்றும், மீனவன் மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவன் என்றும், நாட்டைக் காக்க தன் உயிரையும் கொடுப்பான் என்றும் கருத்துகளைக் கூறி மீனவர்களைப் பெருமைப்படுத்துகிறார். மேலும், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், தங்கள் வாழ்வியலுக்காக கடலிலும் கரையிலும் படும் துன்பங்களைக் குறிப்பிடுகிறார். குறிப்பாக, இலங்கைக் கடற்படையால் படும் துன்பத்தை வெளிப்படுத்துகிறார். இது, மீனவர்களுக்கு ஆறுதலைத் தருகிறது. 

பல்வேறு நபர்கள், மீனவர்கள்குறித்து தவறான தகவல்களைப் பரப்பிவரும் நிலையில், மீனவர்கள்குறித்து நல்ல விதமாகவும், மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் தனது `சர்கார்' திரைப்படத்தின்மூலம் மக்களுக்குச் சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.