வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (07/11/2018)

விஷப்பாம்புடன் பைக்கில் பயணம் செய்த டிரைவர்! - வண்ணார்பேட்டையில் சம்பவம்

நெல்லையில் தனியார் கார் ஓட்டுநரின் பைக்கில் விஷப்பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டீ குடிப்பதற்காக பைக்கை ஓரமாக நிறுத்தியபோது அதில் இருந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. 

விஷப்பாம்பு

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். தனியார் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சொந்த வேலையாக அவர் தனது பைக்கில் நெல்லைக்கு வந்துள்ளார். வழியில் சிலரைச் சந்தித்துப் பேசிய அவர், அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது வண்ணார்பேட்டையில் உள்ள சாலையோர டீக்கடையின் அருகே பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்தார்.

அங்கிருந்து மீண்டும் புறப்படுவதற்காகப் பைக்கை எடுத்தபோது பெட்ரோல் டேங்கின் அடியில் இருந்து ஏதோ தலை காட்டியதுபோல இருந்துள்ளது. அதனால் சந்தேகம் அடைந்த அவர், பைக்கை நிறுத்திவிட்டு குனிந்து பார்த்துள்ளார். அப்போது பெட்ரோல் டேங்கின் அடியில் பாம்பு பதுங்கி இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். அதனால் அவர் அலறி கூச்சல் எழுப்பியதால் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் உதவிக்கு ஓடிவந்துள்ளனர். 

பாம்பை பைக்கில் இருந்து வெளியேற்ற அங்கிருந்தவர்கள் எடுத்த முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. பாம்பு இன்ஜின் பகுதிக்குள் சுருண்டு படுத்துக்கொண்டது. அதனால், டீக்கடையில் இருந்து வெந்நீரை வாங்கி வந்து பெட்ரோல் டேங்கின் மேலாக ஊற்றினார்கள். அதில் பாம்பு இறந்துவிட்டது. அதன் பின்னரே பாம்பை வெளியே எடுக்க முடிந்தது. 6 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பு விஷம் நிறைந்த கட்டுவிரியன் வகையைச் சார்ந்தது என்பது தெரியவந்தது. டீ குடிக்க பைக்கை நிறுத்தியதால் லட்சுமணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.