வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:09 (07/11/2018)

கடந்த ஆண்டை விஞ்சியது தீபாவளி மது விற்பனை!

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 614 கோடி ரூபாய் மது விற்பனை நடந்திருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. 

மது விற்பனை

தீபாவளிப் பண்டிகை  என்றாலே, பட்டாசு விற்பனைக்கு டஃப் கொடுக்கும் ஒரே விற்பனை, மது விற்பனைதான். ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை கூடிக்கொண்டேயிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை 320 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த 3 நாள்களில் தமிழகம் முழுவதும் 614 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், விற்பனையின் அளவு அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் சங்கத்தினர்  தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றய தினமும் அதற்கு முந்தைய தினமும் மொத்தமாக 536 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, மது விற்பனை இந்த ஆண்டு 78 கோடி ரூபாய் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.