வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (07/11/2018)

கடைசி தொடர்பு:16:43 (07/11/2018)

`சந்திராசாமி; கே.பி; ஆயுதத் தரகர் ஆண்டன் கஷோகி!'- ராஜீவ் கொலை மர்மத்தை விலக்கிய பி.என்.மிஸ்ரா

சர்வதேச ஆயுதத் தரகர் ஆண்டன் கஷோகியுடன் கே.பி.க்குத் தொடர்பிருந்தது என்றும், கஷோகி சந்திராசாமியின் பக்தர் என்றும், சந்திராசாமியுடன் நெருக்கமாக இருந்தவரும் பத்திரிகையாளருமான ராஜேந்திர குமார் ஜெயின் கூறுவதோடு, ராஜீவ் கொலை சதியில் சந்திராசாமிக்குத் தொடர்புண்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 1998-ல் கார் வெடிகுண்டு தாக்குதலில் ஜெயின் கொல்லப்பட்டார்.

`சந்திராசாமி; கே.பி; ஆயுதத் தரகர் ஆண்டன் கஷோகி!'- ராஜீவ் கொலை மர்மத்தை விலக்கிய பி.என்.மிஸ்ரா

சி.பி.ஐ அமைப்புக்குள் நடந்து வரும் மோதல்களால் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் முக்கியமான அம்சங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. `பேரறிவாளன் வாக்குமூலத்தைத் திருத்தியதாக ஒப்புக்கொண்ட தியாகராஜன், தீர்ப்பு கொடுத்த முன்னாள் நீதியரசர் கே.டி.தாமஸ் வரிசையில் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மிஸ்ராவும் இணைந்திருக்கிறார்' என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

டெல்லியைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி விவகாரத்தில் சி.பி.ஐ இயக்குநர்கள் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து, இரண்டு இயக்குநர்களும் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐயின் தற்காலிக இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளானதையடுத்து, இரண்டு இயக்குநர்களும் பதவியில் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. அதேநேரம், சி.பி.ஐ அமைப்பில் நடந்த அதிகார மாற்றத்தினால் இணை இயக்குநராக நான்காம் இடத்தில் இருந்த அருண்குமார் சர்மா என்பவர், எம்.டி.எம்.ஏ எனப்படும் சி.பி.ஐயின் பல்நோக்கு விசாரணை ஆணையத்துக்கு மாற்றப்பட்டார். இந்த மாறுதல்தான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 

``ராஜீவ் காந்தி கொலை விசாரணைக்காக 1998-ம் ஆண்டு டிசம்பரில் பல்நோக்கு விசாரணை ஆணையம் (எம்.டி.எம்.ஏ) அமைக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பையே மக்கள் மறந்து போய்விட்டனர். தற்போது சி.பி.ஐயில் நடந்து வரும் அதிகாரப் போட்டியில் அருண்குமார் சர்மா என்பவர், எம்.டி.எம்.ஏ அமைப்புக்கு மாற்றப்பட்டார். நாட்டின் மிகப் பெரும் புலனாய்வு அமைப்பின் உள்முரண்பாட்டால் ஏற்பட்ட சர்மாவின் நியமனம், எம்.டி.எம்.ஏ அமைப்பின் செயல்பாட்டையை சந்தேகத்துக்கு உரியதாக்கிவிட்டது. எம்.டி.எம்.ஏ அமைப்பில் 15 ஆண்டுகள் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பி.என்.மிஸ்ரா என்பவர், ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் சதிகளை `அவுட் லுக்' ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இந்த வழக்கில் யாரும் எதிர்பார்க்காத கோணம் இது" என விவரித்த ராஜீவ்காந்தி கொலை வழக்கின் உள்விவகாரங்களை அறிந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர், எம்.டி.எம்.ஏ அமைப்பில் நடக்கும் குளறுபடிகளை நம்முன் பட்டியலிட்டார். 

ராஜீவ்காந்தி படுகொலை

``சி.பி.ஐ அமைப்பில் திறமையானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது எம்.டி.எம்.ஏ அமைப்பு. பல்வேறு புலனாய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெற்றிருக்கின்றனர். ராஜீவ் காந்தி கொலையில் விரிவான சதித் திட்டத்தைக் கண்டறிய அமைக்கப்பட்ட இந்த அமைப்பு, 2 ஆண்டுகளில் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ராஜீவ் கொலைக்குப் பின்னால் நடந்த சதிவேலைகளை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் 20 ஆண்டுகள் ஓடி விட்ட பிறகும் இன்னும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. இந்தத் தாமதத்தால் முக்கியக் குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் மரணமடைந்துவிட்டனர்.  1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பெல்ட்டை இடுப்பில் கட்டிக்கொண்டு மனித வெடிகுண்டாக மாறிய பெண், ராஜீவ்காந்தியைக் கொன்றார். அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியானது. இச்சம்பவத்தில் மேலும் 14 பேர் மரணமடைந்தனர். புலனாய்வின்போது சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர்; பலர் தண்டிக்கப்பட்டனர்; கொலைக்குப் பின்னணியில் இருந்த சதியைக் கண்டறிய ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டது. 

விசாரணையின்போது சதித் திட்டத்தில் பல முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உருவானது. காங்கிரஸின் அரசியல் எதிரியான ஒரு சாமியார், காலிஸ்தான் தீவிரவாதி, சர்வதேச ஆயுதத் தரகர், தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆகியோரின் பெயர்கள் எல்லாம் சேர்க்கப்பட்டன. ஆனால் உண்மை என்னவென்பது மூன்று பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் வாய்ப்பு உண்டு. அவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது நம்பிக்கைக்குரிய ‘கே.பி.’ என்றழைக்கப்பட்ட குமரன் பத்மநாபன் மற்றும் கிட்டு. இப்போது சி.பி.ஐ அமைப்பில் நடந்த குழப்பத்தில் அருண்குமார் சர்மா, எம்.டி.எம்.ஏ விசாரணைப் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் சி.பி.ஐக்கான கொள்கைகளை உருவாக்கும் பதவியில் இருந்தவர். சதியின் பின்னணி குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன், சந்தேகிக்கக் கூடிய 21  நபர்களைப் பட்டியலிட்டு, அதற்கு விடை கண்டறிய வேண்டும் என எம்.டி.எம்.ஏவிடம் கோரியிருந்தது. ` இந்தச் சதியில் சாமியார் சந்திராசாமியின் பங்கு என்ன? காங்கிரஸை வசைபாடும் சுப்ரமணிய சாமி, லண்டனில் சந்திராசாமியைச் சந்தித்தது ஏன்? காலிஸ்தான் பயங்கரவாதிகள் அதில் ஈடுபட்டார்களா? யாருடைய தூண்டுதல் காரணமாக ஆயுதத் தரகர் ஆண்டன் காஷோகியின் கப்பல் விடுதலைப் புலிகளுக்கு அந்த நேரத்தில் ஆயுதங்களை ஏற்றி வந்தது?' இந்தக் கேள்விகளை விசாரித்து அறிய பிரபாகரன், கே.பி., கிட்டு ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தால் அந்நிய சதிகள் பற்றிய உண்மை தெரியும் என்றும் ஜெயின் கமிஷன் அறிவுறுத்தியது.

சுப்ரமணிய சுவாமி

ஜெயின் கமிஷனின் `செயல்பாட்டு அறிக்கை’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது கிட்டு இறந்து விட்டார். கிட்டுவை இந்தியக் கடற்படை காட்டிக் கொடுத்ததோடு அவர் வந்த படகையும் மூழ்கடித்துவிட்டது. கடற்படையினர் கிட்டுவையும் அவருடன் வந்தவர்களையும் உயிருடன் மீட்டெடுத்திருக்க முடியும். கிட்டுவை விசாரித்திருந்தால் அவர் தந்திருக்கக் கூடிய தகவல் முக்கியமானதாக இருந்திருக்கும் என்று அப்போது `எம்.டி.எம்.ஏ.’வின் சென்னைப் பிரிவில் 1999-லிருந்து 2001 வரை பணியாற்றிய புலனாய்வு அதிகாரி கே.ரகோத்தமன் கூறுகிறார். இவர் புலிகளின் நடவடிக்கைகளை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக்குழுவின் விசாரணை அதிகாரியாகவும் இருந்தார். கிட்டுவின் மரணத்துக்குப் பிறகு, இந்தச் சதிக்கான மர்மத்தைத் திறக்கும் திறவுகோல் பிரபாகரன், கே.பி. ஆகிய இருவரிடம் மட்டுமே இருந்தது. ஆனால் 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் பிரபாகரனைக் கொன்றுவிட்டது. உண்மை அறிந்த மூவரில் இப்போது கே.பி. மட்டுமே உயிருடன் இருக்கிறார். பிரபாகரன் கொல்லப்பட்ட மூன்று மாதங்களில் இலங்கை அரசு கே.பி.யைப் பிடித்து, தனது பாதுகாப்பில் உயிருடன் வைத்திருக்கிறது. `இந்தியாவைவிட எவ்வகையிலும் வலிமையில்லாத இலங்கை புலனாய்வுத் துறை, கே.பி.யைப் பிடித்துவிட்ட நிலையில் வலிமைமிக்க இந்தியப் புலனாய்வு நிறுவனம் பல ஆண்டுகளாக இவரைப் பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை என்பதை நம்ப முடியவில்லை' என்கிறார் ரகோத்தமன்.

எம்.டி.எம்.ஏ அமைப்பில் 15 ஆண்டுகள் புலனாய்வு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றுள்ள பி.என்.மிஸ்ரா, விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தருவித்துத் தந்த கே.பி.யை, இலங்கையில் பேட்டி கண்டதாகக் கூறுகிறார். `இந்தக் கொலையில் தனக்குத் தொடர்பில்லை' என்று கே.பி மறுத்ததாகவும் `பிரபாகரனும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த பொட்டு அம்மானும் இந்த முடிவை எடுத்தனர்' என்றும் 2011-ம் ஆண்டு எம்.டி.எம்.ஏ அறிக்கை கூறுகிறது. சர்வதேச ஆயுதத் தரகர் ஆண்டன் கஷோகியுடன் கே.பி.க்குத் தொடர்பிருந்தது என்றும், கஷோகி சந்திராசாமியின் பக்தர் என்றும், சந்திராசாமியுடன் நெருக்கமாக இருந்தவரும் பத்திரிகையாளருமான ராஜேந்திர குமார் ஜெயின் கூறுவதோடு, ராஜீவ் கொலை சதியில் சந்திராசாமிக்குத் தொடர்புண்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 1998-ல் கார் வெடிகுண்டு தாக்குதலில் ஜெயின் கொல்லப்பட்டார். ஆச்சர்யம் என்னவென்றால் ஜெயின் படுகொலையை விசாரிக்குமாறு, எம்.டி.எம்.ஏ.விடம் கூறப்படவில்லை. உண்மையை ஜெயின் வெளியிடாமல் தடுக்கும் நோக்கத்துக்காகவே கொல்லப்பட்டார் என்பதுதான் உண்மை. கடந்த ஆண்டு சந்திராசாமியும் ஆயுதத் தரகர் கஷோகியும் இறந்து விட்டனர். `சந்திராசாமிக்கு ராஜீவ் கொலை சதியில் தொடர்பு உண்டு' என்று ஜெயின் மட்டும் கூறவில்லை. சிறையில் இருக்கும் நிழல் உலக தாதாவான பப்லு ஸ்ரீவத்சாவும், ராஜீவ் கொலைச் சதியில் சந்திராசாமியின் பங்கு குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்ததாக முன்னாள் எம்.டி.எம்.ஏ புலனாய்வு அதிகாரி மிஸ்ரா கூறுகிறார். ஆனால் அவர் என்ன கூறினார் என்பதை வெளியிட மாட்டேன் என்று அவர் கூறுகிறார். எம்.டி.எம்.ஏ.அமைப்பிலிருந்து பதவியில் நீடிக்க விடாமல் வெளியேற்றப்பட்டவர் மிஸ்ரா. எம்.டி.எம்.ஏ.கலைக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிக்க மத்திய அமைச்சரவை உத்தரவிட்ட பிறகும், பதவியில் நீடிக்க மிஸ்ரா அனுமதிக்கப்படவில்லை.

ராஜீவ்காந்தி படுகொலை

`சந்திராசாமியுடன் ரகசியத் தொடர்பில் இருந்தவர், பா.ஜ.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி. `அவர் லண்டனில் சந்திராசாமியைச் சந்தித்ததன் பின்னணி சந்தேகத்துக்கு இடமளிக்கிறது' என்று கூறிய ஜெயின் ஆணையம் சுப்ரமணிய சாமியையும் கண்காணிக்க எம்.டி.எம்.ஏ.வுக்கு அறிவுறுத்தியது. `தானும் சந்திராசாமியும் ஒரே நேரத்தில் லண்டன் பயணமானது எதேச்சையாக நடந்த நிகழ்வு' என்று சுப்ரமணிய சாமி தந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு சு.சாமி மீதான விசாரணையையும் அவர் தொடர்பான கோப்புகளையும் எம்.டி.எம்.ஏ முடித்து விட்டது' என்கிறார் மிஸ்ரா. ராஜீவ் கொலைக்குப் பிறகு, அகாலிதளத் தலைவர் மகந்த் சேவாதாஸ் சிங், `ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருப்பதாக' பிரதமர் சந்திரசேகரிடம் 6 மாதங்களுக்கு முன்பே எச்சரித்ததாகக் கூறினார். காலிஸ்தான் இயக்க நிறுவனர் ஜக்ஜித் சிங் சோகான் இத்தகவலைத் தம்மிடம் கூறியதாகவும் மிஸ்ரா கூறினார். விசாரணையில், `இது அதீத கற்பனை' என்ற முடிவுக்கு வந்தது எம்.டி.எம்.ஏ. எம்.டி.எம்.ஏ. விசாரணையை இந்தியாவுக்கு வெளியே நடத்த விரும்பவில்லை. `அந்நிய சதியை மூடி மறைப்பதே இதன் நோக்கம்' என்கிறார் ரகோத்தமன். எம்.டி.எம்.ஏ. விசாரணையை நடத்துவதிலோ, தீவிரப்படுத்துவதிலோ கடந்த பல ஆண்டுகளாக ஆர்வம் காட்டவில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, இந்த நிறுவனத்தில் வேலை செய்வோர் எண்ணிக்கையை 38 ஆகக் குறைத்ததிலிருந்தே இதைப் புரிந்துகொள்ள முடியும். 

உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தியாவுக்குள் புலனாய்வு விசாரணைகள் முடிந்துவிட்டன என்று குறிப்பிட்டுள்ளது. கிரிமினல் வழக்குகளில் அண்டை நாடுகளின் உதவி கேட்டு 25 நாடுகளுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டன. இன்னும் 6 நாடுகளிடமிருந்து மட்டுமே பதில் வரவில்லை என்றும் `எம்.டி.எம்.ஏ.’ உள்துறைக்கு அனுப்பிய அறிக்கை கூறுகிறது. இவ்வளவுக்கும் பிறகு இந்த அமைப்பின் விசாரணை ஏன் இழுத்தடிக்கப்படுகிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. 2013 வரை இந்த அமைப்பு அனுப்பிய விசாரணை முன்னேற்றம் குறித்த சீலிடப்பட்ட 60 அறிக்கைகள் சென்னை சிறப்பு நீதிமன்ற அலமாரிகளில் சீல் பிரிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இவற்றின் எண்ணிக்கை தற்போது சுமார் 100 ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராஜீவ்காந்தி கொலைக்கு சதித் திட்டம் தீட்டியது யார்? ஏன் தீட்டப்பட்டது என்ற உண்மை இதில் புதைந்து கிடக்கலாம் என்று நம்பப்படுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் இறந்து விட்டனர் அல்லது பிடிபடாதவர்களாக இருக்கின்றனர். அதே நேரத்தில் எம்.டி.எம்.ஏ.வும் செலவு அதிகம் பிடிக்கும் விசாரணையைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் முக்கியத்துவம்மிக்கதாக இருந்தபோதும் விசாரணை கமிஷனுக்கான கால வரம்பை உச்ச நீதிமன்றம் நிர்ணயிக்கவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.