வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:18:30 (07/11/2018)

`பட்டாசை ஏன் இங்கு வெடிக்கிறீர்கள்?' - தட்டிக்கேட்டவரின் தலையைத் துண்டித்த கும்பல் 

 பட்டாசை வெடித்த தகராறில் நடந்த கொலை

சென்னை பெரும்பாக்கம் எழில்நகரில் `பட்டாசை ஏன் இங்கு வெடிக்கிறீர்கள்’ என்று கேட்ட  20 வயது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள நூக்கம்பாளையம், எழில் நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சேட்டு. இவரின் மகன் சந்தீப்குமார் 20 வயதான அவர், மயிலாப்பூரில் உறவினர்களுடன் சேர்ந்து தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். தீபாவளியையொட்டி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புப் பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் பட்டாசு வெடித்தனர். அப்போது, `பட்டாசை ஏன் இங்கு வெடிக்கிறீர்கள்' என்று சந்தீப்குமார் கேட்டதாகத் தெரிகிறது. இதனால், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் சந்தீப்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தீப்குமாரைச் சிலர் தாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்தவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சந்தீப்குமார் அதே பகுதியில் தனியாக நின்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல், கத்தி, அரிவாளுடன் அங்கு வந்தனர். அந்தக் கும்பல், சந்தீப்குமாரைத் தாக்க முயன்றனர். அவர்களிடமிருந்து சந்தீப்குமார் தப்பி ஓடினார். ஆனால், அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல் அருகில் உள்ள காலி மைதானத்தில் சந்தீப்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. கழுத்து, மார்பில் என உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆத்திரம் தீராத கும்பல் சந்தீப்குமாரின் தலையைத் தனியாகத் துண்டித்துவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

வாலிபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் காட்டுத்தீப்போல பரவியது. இதற்கிடையில் கொலை குறித்து பள்ளிக்கரணை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீஸார், சந்தீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சந்தீப்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் எங்களின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரைக் கொலை செய்த கும்பலைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். அதில் சிலர் கூட்டாக சேர்ந்து சந்தீப்குமாரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.