`காய்ச்சல்’ கணவரை கவனித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்! | Thiruvallur Woman died of dengue

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (07/11/2018)

`காய்ச்சல்’ கணவரை கவனித்த மனைவிக்கு நேர்ந்த சோகம்!

 டெங்கு  காய்ச்சல் பரப்பும் ஏடிஎஸ் கொசு

`காய்ச்சல்' பாதிப்பால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை அருகில் இருந்து கவனித்த மனைவி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் அருகே உள்ள ஆரம்பாக்கத்தை அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி முனியம்மாள் (37). கடந்த சில தினங்களாக செல்வம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். திருவள்ளூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் குணமடையவில்லை. இதனால், மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செல்வம் சேர்க்கப்பட்டார். அப்போது, அவரை அருகில் இருந்து கவனித்துவந்தார் முனியம்மாள். இந்தச் சூழ்நிலையில் முனியம்மாளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். உடனே, அவரை அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமானது. சிகிச்சைப் பலனின்றி முனியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். ஆனால், அவரின் கணவர் செல்வத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.  காய்ச்சல் பாதிப்பால் இறந்த முனியம்மாள் மனைவி முனியம்மாள் இறந்த தகவலைக் கேட்ட செல்வம் கதறி அழுதார். அதுபோல, முனியம்மாள் இறந்த சம்பவம் அவரின் உறவினர்கள் மட்டுமல்லாமல், மருத்துவமனையிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முனியம்மாள் இறப்புகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ``சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை ஏடிஎஸ் கொசுமூலம் வேகமாகப் பரவுகிறது. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களைக் கடித்த கொசுக்கள் மற்றவர்களைக் கடிக்காமல் இருக்க கொசுவலைகளும் போடப்பட்டுள்ளன. ஆனால், எங்களின் கண்காணிப்பை மீறி சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. முனியம்மாளுக்கும் செல்வத்துக்கும் டெங்கு காய்ச்சல் என்பது உறுதிசெய்யப்படவில்லை. முனியம்மாளின் இறப்புக்கான காரணம் தெரிந்த பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர்.