வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (07/11/2018)

கடைசி தொடர்பு:19:13 (07/11/2018)

எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் ! - ஆர்.பி.எஃப் வீரர்களுக்குக் குவியும் பாராட்டுகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, ரயில் பெட்டியிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரசவம்

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா (வயது 26). இவர் தன் கணவர் இசக்கியுடன் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் விசாகப்பட்டினத்திலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து - எழும்பூர் ரயில்நிலையம் வரும் வழியில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எழும்பூர் ரயில்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

குழந்தை

 

ரயில் எழும்பூரில் உள்ள 6-வது நடைமேடையை அடைந்ததும், 108 ஆம்புலன்சிலிருந்த அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த பாரா மெடிக்கல் ஸ்டாஃப்ஸ் கொண்ட குழு இணைந்து ரயில் பெட்டியிலேயே பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். இதில், ஆர்.பி.எஃபைச் சேர்ந்த பெண் போலீஸார் அவருக்கு உதவி செய்தனர். இதையடுத்து அந்தப் பெண் அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார். இதனால் ரயில் வழக்கமான நேரத்தைவிட 10 நிமிடம் தாமதாகப் புறப்பட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை ரயில்வே போலீஸார் வெளியிட்டுள்ளனர்.