வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (07/11/2018)

சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் அ.தி.மு.க நிர்வாகி பன்றிக் காய்ச்சலுக்குப் பலி!

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில், அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.

புகழேந்தி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அத்திபள்ளம் வானவிராயன்பட்டியைச் சேர்ந்தவர் புகழேந்தி (37). 
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அ.தி.மு.க-வில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளராகவும் இருந்து வந்தார். 
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு காரணமாக விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், புகழேந்திக்குப் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், காய்ச்சல் குணமடையாததால், திருச்சி அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, உடனடியாகச் சில மணி நேரங்களிலேயே உடல் தகனம் செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்பு உணர்வு மற்றும் தடுப்பு குறித்த ஆய்வு நடத்தி வரும் நிலையில், அவரது சொந்த தொகுதியிலேயே பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் இறந்துள்ள சம்பவம் அ.தி.மு.க பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.