வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (07/11/2018)

சிலைத்திருட்டு முயற்சி நடந்த உத்திரகோசமங்கை கோயிலில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு!

 ராமநாதபுரம் அருகே கொள்ளை முயற்சி நடந்த உத்திரகோசமங்கை மரகத நடராஜர்  கோயிலில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் இன்று ஆய்வுசெய்தார்.

உத்திரகோசமங்கை கோயிலில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆய்வு

ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கையில் அமைந்துள்ளது மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் திருக்கோயில். சிவன் கோயிலான இங்கு, விலை மதிப்பிட முடியாத பச்சை மரகதக்கல்லினால் உருவாக்கப்பட்ட  நடராஜர் சிலை உள்ளது. சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள இந்த மரகதச் சிலை, ஆண்டு முழுவதும் சந்தனப் பூச்சுடன் காணப்படும்.  இது, ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் மட்டும் சந்தனப்பூச்சு கலையப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டுக்கு வைக்கப்படும்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி அதிகாலை, இந்தக் கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கோயில் காவலாளி செல்லமுத்து உள்ளிட்ட 3 காவலாளிகளும் அன்று இரவு அம்மன் சந்நிதி, சாமி சந்நிதி, நடராஜர் சந்நிதி ஆகிய பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளனர். காவலாளி செல்லமுத்து, நடராஜர் சந்நிதியில் ரோந்து சென்றபோது, அங்கே இருந்த உண்டியல் அருகே மறைந்திருந்த இருவரைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். அவர்களை விசாரிக்க முயன்ற நிலையில், அந்த இருவரும் செல்லமுத்துவை தாக்கியுள்ளனர். இதில், செல்லமுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதன்பின் மரகத நடராஜர் சிலையைக் கொள்ளையர்கள் திருடுவதற்காக அந்த சந்நிதியின் கதவுகளை உடைக்க முயன்றுள்ளனர். அந்தக் கதவில் அபாய ஒலிக் கருவி பொருத்தப்பட்டிருந்த நிலையில், கொள்ளையர்கள் கதவைத் தொட்டதும் அபாய ஒலி சத்தம் எழுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அபாய ஒலியைக் கேட்ட மற்ற காவலாளிகளும் பொதுமக்களும் கோயிலுக்குத் திரண்டுவந்து பார்த்தபோது, செல்லமுத்து மயங்கிக் கிடந்துள்ளார்.  உடனடியாக தாக்குதலில் காயமடைந்த காவலாளி செல்லமுத்து, ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. இந்தக் கொள்ளை முயற்சிகுறித்து உத்திரகோசமங்கை போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 இந்நிலையில், தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல், இன்று கொள்ளை முயற்சி நடந்த உத்திரகோசமங்கை கோயிலில் ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆய்வு நடத்திய அவர், கோயிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்த பகுதி, நடராஜர் உள்ளிட்ட முக்கிய சந்நிதிகளின் கதவுகள், சிலைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கோயில் அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலில் நடந்த கொள்ளை முயற்சியைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணிகளைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில் காவலர்களுடன் போலீஸாரும் இணைந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். காவலாளியைத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடியவர்கள் 10 நாளில் சிக்குவார்கள்’’ என்றார்.  ஐஜி பொன்.மாணிக்கவேலுவுடன் ராமநாதபுரம் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன், டிஎஸ்பி முருகேசன், ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.