வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (08/11/2018)

கடைசி தொடர்பு:10:32 (08/11/2018)

33 ஆண்டுகளுக்குப் பின் நிம்மதியாகத் தீபாவளி கொண்டாடிய கிராமம்..!

33 ஆண்டுகளுக்குப் பின் நிம்மதியாகத் தீபாவளி கொண்டாடிய கிராமம்..!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எழுமகளுர் கிராம மக்கள், சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் தீபாவளிப் பண்டிகையை இந்த ஆண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பிட்ட ஒரு குடும்பத்தினரின் சாராய சாம்ராஜ்யத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இந்த ஆண்டு கட்டுப்படுத்தியதை அடுத்து, அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

ஒரு குடும்பம் நடத்திய சாராய சாம்ராஜ்யத்தால் கடந்த 33 ஆண்டுகளாகத் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் நன்னிலம் அருகேயுள்ள எழுமகளுர் கிராம மக்கள் சிக்கித் தவித்தனர். இந்த ஆண்டு நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளாகவும் சாராயச் சண்டைகள் தங்கள் கிராமத்தில் ஒழிக்கப்பட்ட நாளாகவும் எண்ணி, இந்தப் பண்டிகையை நிம்மதியாகக் கொண்டாடிய நிகழ்வு கிராமத்தினர் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ளது எழுமகளுர் கிராமம். இங்கு வசிக்கும் ஜெயராமன் - விஜயா தம்பதி மற்றும் அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் கடந்த பல ஆண்டுகளாக கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மணிவண்ணன் - தீபாவளி கொண்டாடிய கிராமம்இந்தத் தம்பதியின் மகன் மணிவண்ணன் - மருமகள் விஜயலட்சுமி மற்றும் மகள்கள் மங்கையர்க்கரசி, மைனாவதி ஆகியோர் ஒன்றுசேர்ந்து எழுமகளுர் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் கள்ளச்சாராய விற்பனையைத் தங்களின் குலத்தொழிலாகவே செய்து வந்துள்ளனர். இதனால், இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பொரும்பூர், பில்லூர், கிளியனூர், ஆத்தூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து பெரும்பாலானோர் இங்கு வந்து சாராயம் வாங்கிக் குடிப்பதுடன், பல்வேறு சண்டை, சச்சரவுகளிலும் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்களுக்கு 24 மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் சாராயக் கடையை ஜெயராமன் குடும்பத்தினர் நடத்தி வந்தனர். சாராய விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு இவர்களுக்குக் கிடைக்கும் சுமார் ரூ.50,000 வருமானத்தில், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் நெருக்கமான அரசியல் புள்ளிகளையும் அவர்கள் `கவனித்து’ விடுவதால், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், போலீஸாரின் முழுமையான ஆதரவுடன் கள்ளச்சாராயத்தை அந்தக் குடும்பத்தினர் தொடர்ந்து விற்பனை செய்து வந்தனர். 

லோக்கல் புள்ளிகளின் மிரட்டலைச் சமாளிக்கக் கூலிப்படையைச் சேர்ந்தவர்களையும் கைவசம் மங்கயர்க்கரசி - தீபாவளி கொண்டாடிய கிராமம்வைத்திருப்பார்கள். கள்ளச்சாராயத் தொழிலில் ஐந்து பெண்களும் ஈடுபட்டிருப்பதால், எந்த அதிகாரியாவது தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சர்வசாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள். 

உயரதிகாரிகள் வரை ஜெயராமன் குடும்பத்தினர் பொய்ப் புகார் கொடுத்து வந்ததால், எந்த அதிகாரியும் இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதனால், ஜெயராமன் - விஜயா குடும்பத்தினரின் கள்ளச்சாராய வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன், பாலையூர் இன்ஸ்பெக்டராக சுவாமிநாதன் இருந்தபோது தொடர் நடவடிக்கை எடுத்து மங்கையர்க்கரசியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைக்குள் தள்ளினார். அவர் மீது பொய்ப் புகார் கொடுத்தார்கள். ஆனால், அது எடுபடவில்லை. வழக்கில் சிக்கினாலும் சாராய வியாபாரம் மட்டும் தடைபடவே இல்லை. ஊருக்குள் நடைபெறும் சாராய வியாபாரத்தால் தினந்தோறும் சண்டை, வழிப்பறி சம்பவங்கள் நிகழ்வதுடன் அந்தப் பகுதியில் பெண்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை நீடித்து வந்தது. இதனால், எழுமகளுர் கிராமத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்தான் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நாகலட்சுமி பொறுப்பேற்றார். அதன் பிறகு சாராயக் கும்பலின் கொட்டத்தை அடக்க இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுத்தார், கள்ளச்சாராயக் கும்பலின் அடாவடிக்கு அவர் இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

இதுபற்றி கிராமத்தினர் சிலரிடம் பேசியபோது, “ஜெயராமன் குடும்பத்தினர் நடத்தி வரும் சாராயக் கடைக்குப் பக்கப்பலமே போலீஸ்தான். சில நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஐடியா கொடுப்பதே போலீஸ்தான். ஊர்க்காரர்கள் அவர்களை எதிர்த்துப் பேசிவிட்டால், யார் எப்போது வந்து தாக்குவார்கள் என்பதே தெரியாது. அந்தக் குடும்பத்தினர் மீது கொலை வழக்கு உட்பட எத்தனையோ வழக்குகள் இருந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் தொடர்ந்து சாராயம் விற்று வந்தனர். 

இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி - தீபாவளி கொண்டாடிய கிராமம்முகம் தெரியாத வெளியூர்க்காரர்கள் நிறைய பேர் இங்கு வருகை தருவதும், ரகளை செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் கிராமத்தின் ஒட்டுமொத்த நிம்மதியும் போய்விட்டது. ஒரு திருநாள், பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம். இங்குவந்து சாராயம் வாங்கிக் குடித்துவிட்டு, பலரும் சண்டை, மோதல்களில் ஈடுபடுவதால், சச்சரவுகள் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும். 
ஆனால், தற்போது மணிவண்ணன் குண்டர் சட்டத்திலும் மற்றவர்கள் கடுமையான வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாராய விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஆண்டு, எங்கள் கிராமத்தினர் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தோம். எங்க ஊர் பெண்கள் தெருவில் தண்ணீர் தெளித்து, மாக்கோலம் போட்டு, பட்டாசுகள் வெடித்து நிம்மதியாகக் கொண்டாடினார்கள். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை” என்றனர். 

இதுபற்றி பாலையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாகலட்சுமியிடம் பேசினோம். “மணிவண்ணன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும்போதே போலீஸாரைத் தாக்கியுள்ளார். கள்ளச் சாராயம் மூலம் வரும் பணம் அவர்களை எல்லைமீற வைத்துவிட்டது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு தற்போதுள்ள எஸ்.பி விஜயகுமார், மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி சுவாமிநாதன் ஆகியோர் முழு ஒத்துழைப்பு தருவதால் தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்தக் கிராமத்தில் இப்போது கள்ளச் சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. மங்கையர்கரசியும் மைனாவதியும் தலைமறைவாகிவிட்டனர். விரைவில் அவர்களையும் கைதுசெய்து சிறையில் அடைப்போம்” என்றார் உறுதியுடன்.
 


டிரெண்டிங் @ விகடன்