``சுழி பாரு துண்டு போடு... விலையை முடி!’’ - மாட்டுச் சந்தையின் கதை | this is how cattle market operates

வெளியிடப்பட்ட நேரம்: 09:11 (08/11/2018)

கடைசி தொடர்பு:09:26 (08/11/2018)

``சுழி பாரு துண்டு போடு... விலையை முடி!’’ - மாட்டுச் சந்தையின் கதை

இன்று பெரும்பாலான மாட்டு சந்தைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் அடையாளமாகச் சொல்லப்பட்ட சந்தைகள் இன்று அங்கே இல்லவே இல்லை...

``சுழி பாரு துண்டு போடு... விலையை முடி!’’ - மாட்டுச் சந்தையின் கதை

``ஏப்பா பாண்டி, விடியப்போகுது வாய்யா... வெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை கூடிடும். வேகமா போனாத்தான மாடு வாங்க முடியும்" என்பது போன்ற குரல்களின் எண்ணிக்கைகள் எல்லாம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்துவிட்டன. 

மாட்டு சந்தை

அப்போதெல்லாம் கிராமங்களுக்கு இரண்டு பேர் வீதமாவது, அந்தந்த பகுதிகளில் நடக்கும் மாட்டுச் சந்தையில் கலந்துகொள்வார்கள். இன்று இரண்டு கிராமங்களுக்கு ஒருவர்கூட மாட்டுச்சந்தைப் பக்கம் செல்வதில்லை. அவ்வளவு ஏன்? இன்று பெரும்பாலான இடங்களில் சந்தைகளே இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. காலப்போக்கில் அழிந்த ஈடுகட்ட முடியாத முக்கியமான இடம் சந்தைகளுக்கு உண்டு. ஒவ்வொரு மாடும் வரிசைகட்டி நிற்க காலை 4 மணியிலிருந்தே பேரம் தொடங்கிவிடும். மாடுகளையும் வியாபாரிகளையும் நம்பி பல உபதொழில்கள் மூலம் மக்கள் பிழைத்துக்கொண்டிருந்தது தனிக்கதை. இன்றளவில் சந்தையில் மாடுகளை வாங்க வேண்டும்..? சந்தையில் எப்படி மாடு வாங்குவார்கள், விற்பனை செய்வார்கள் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதன் நோக்கம்தான், இக்கட்டுரைக்கான நோக்கம்.

பொதுவாக மாட்டுச் சந்தைகளில் மாடுகள் விற்பனையாவதைப் பார்க்கும்போது சாதாரண விற்பனை போலத்தான் இருக்கும். ஆனால், அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள் எப்போதுமே ஒருவித ஆச்சர்யத்தையே கொடுக்கும். உதாரணமாக மாட்டை விலைபேசும்போது, வியாபாரிகள் இரண்டு பேர் கைகளில் துண்டைப்போட்டு விலை பேசுவது வழக்கம். அதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோல சந்தைகளில் மாடுகளை வாங்கும்போது பல விஷயங்களை சுட்டிக்காட்டி விலை பேசப்படும். அவற்றில் சில விஷயங்களைப் பார்க்கலாம். 

ஒருவர் விற்பனை செய்ய சந்தைக்கு மாடுகளைக் கொண்டு செல்வார். அங்குள்ள தரகர்கள் வியாபாரிகளை அழைத்து வந்து அந்த மாடுகளைக் காண்பிப்பார். மாடுகள் பிடித்துப்போனால், தோளில் இருக்கும் துண்டு கைக்கு வந்துவிடும். தரகரும் வியாபாரியும் துண்டைப் போட்டுக்கொண்டு பேரத்தைத் தொடங்குவர். வியாபாரி 5 விரல்களைக் கூட்டிப் பிடித்தால் 5,000 ரூபாய் என்பது அர்த்தம். மோதிர விரலையும் சுண்டு விரலையும் பிடித்தால் 7,000 ரூபாய் எனவும், சில்லறையைக் குறிக்க விரல்களில் உள்ள ஒவ்வொரு ரேகையையும் பிடித்து விலையை நிர்ணயம் செய்வது உண்டு. விலைபேசும்போது விலையை உடைத்துப் பேச பாதி விரலை பிடித்துக்கொள்வர்.

சந்தை

அப்போது தட்டை, வாச்சி, கொழுவு, பணயம் என்ற சொற்களையும் பேசி மாட்டின் விலை நிர்ணயிக்கப்படும். இதுபோக அப்போது பரிமாறப்படும் சொற்களும் புரியாததாகவே இருக்கும். ``இத்தனை விரலுக்கு வராதுண்ணே’’, ``அதெல்லாம் வரும்ணே’’, ``இன்னும் கொஞ்சம் சேர்த்து முடிங்க’’ இப்படித்தான் விலை பேசப்படுமே தவிர, விலையைப் பற்றி வெளியே தெரியாது. இத்தனை மறைமுகமாகப் பேசும் காரணமும் உண்டு. வெளிப்படையாகக் குறைகளைச் சொல்லி விலை பேசிவிட்டால், அடுத்து விலை கேட்பவர் குறைத்துக் கேட்பார் என்பதற்காகத்தான் இந்த வழிமுறை. அதற்காகத்தான் இந்தத் துண்டு பேரம். 

பேரத்தின்போது பல வழிமுறைகளைப் பயன்படுத்தி மாட்டைப் பரிசோதிக்கும்போது மாட்டில் இவ்வளவு விஷயங்களா என்பது கொஞ்சம் ஆச்சர்யத்தைத்தான் கொடுக்கும். நிறம், கொம்பு, சுழி, பல் எனப் பலவற்றையும் பார்த்துத்தான் ஒருவர் சந்தையில் இருந்து மாட்டை வாங்குவார். ஒவ்வொன்றும் மாட்டின் ஒவ்வொரு தன்மையை வெளிப்படுத்தும். உதாரணமாகப் பல் என்பது மாடுகளின் வயதைக் குறிக்கும். சுழி வீட்டின் நலனையும், கொம்பு மாட்டின் குணத்தையும், நிறம் அதன் இனத்தையும் குறிக்கும். மொத்தம் மாட்டுக்கு எட்டு பற்களைக் கொண்டிருக்கும். எட்டு பற்கள் (இது பால் பற்கள் என்றும் சொல்லப்படுவது உண்டு) இரண்டு இரண்டாக விழ ஆரம்பித்து பெரிய பற்களாக முளைக்க ஆரம்பிக்கும். அந்தப் பெரிய பற்கள்தான் மாடுகளின் வயதைத் தீர்மானிக்கும். எட்டு பற்களும் பெரிய பற்களாக இருந்தால் வயதான மாடுகள் என்று அர்த்தம். வயதான மாடுகளை ``கடை சேர்ந்துருச்சு போல’’ என்று சொல்வார்கள். 

ஆண் மாடாக இருந்தாலும், பெண் மாடாக இருந்தாலும் சுழியைப் பொறுத்துத்தான் சந்தையில் விலைபோகும். நெற்றியில் உச்சியில் ஒரு சுழி, இரு காது மடல்களின் ஓரத்தில் மடலுக்கு ஒரு சுழி வீதம் இருக்க வேண்டும். பிடரியில் ஒரு சுழி இருக்க வேண்டும். இரண்டு சுழியாக இருந்தால் முன்னும் பின்னுமாக இல்லாமல் ஜோடியாக இருக்க வேண்டும். இது சரியாக இருந்தால்தான் மாடு நல்ல விலைக்குப் போகும். இதுபோக மாட்டில் 32 வகை சுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு சுழிக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதுபோல திமிலை விட்டு அரை அடி நீளம் ஒரு சுழி இருந்தால் நல்லது. அதே சுழி (நீர் சுழி) தொப்புளுக்கு நேராக இருந்தால், அது கழிப்பு மாடு என்றும் சொல்வார்கள். இதேபோல பூரான் சுழி, வாடை சுழி, வால் சுழி எனப் பல சுழிகள் மாட்டின் விலையைக் குறைக்கும். அதேபோல வால் வெடி வாலாக இருந்தால் அம்மாடு குறைவாகவே விலை போகும்.

மாட்டு சந்தை

சுருட்டைக்கொம்பு, பூங்கொம்பு, பொத்தைக்கொம்பு, விரிகொம்பு, கிளிக் கொம்பு எனப் பல வகை கொம்புகள் உண்டு. ஒவ்வொரு கொம்பும் உடைய மாட்டுக்கு விலையில் சிறிதளவில் மாற்றம் இருக்கும். இதேபோல ஓங்கோல், காங்கேயம் (மயிலை, காரி), புளியங்குளம், உம்பளச்சேரி, ஆலாம்பாடி, மணப்பாறை என அந்தந்த இனங்களுக்கேற்ற விலை போகும். 

இன்று பெரும்பாலான மாட்டுச் சந்தைகள் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் அடையாளமாகச் சொல்லப்பட்ட சந்தைகள் இன்று அங்கே இல்லவே இல்லை... அதைக் காக்க அரசு நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முன்வர வேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்