வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (07/11/2018)

வேலூர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட நர்ஸ்! போலீஸார் தீவிர விசாரணை

வேலூர் ஏரியில் நர்ஸ் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொல்லப்பட்டாரா என்கிற சந்தேகத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நர்ஸ் அனிதா

நர்ஸ் அனிதாவேலூர் கீழ்மொணவூர் திருமால் நகர் டேங்க் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவரின் மனைவி அனிதா (28), சி.எம்.சி மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்தார். திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்றிரவு வீட்டில் இருந்த அனிதா திடீரென மாயமானார். அவர் இன்று, வேலூர் அருகே உள்ள சதுப்பேரி ஏரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்குப் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். நைட்டி அணிந்திருந்த அனிதாவின் வாய், மூக்கில் ரத்தம், நுரை வந்திருந்தது. முகத்தில் சிறு, சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன. பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அனிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.