வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (07/11/2018)

கடைசி தொடர்பு:20:34 (07/11/2018)

தமிழகத்தில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது வழக்கு!

அனுமதியில்லாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள 2,372 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு

தீபாவளிப் பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், பட்டாசுகளை காலை 2 மணி நேரமும் இரவு இரண்டு மணி நேரமும் வெடித்துக்கொள்ளலாம் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும், மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல்துறை தரப்பில் பல்வேறு மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் மட்டும் 359 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல, காஞ்சிபுரத்தில் 79 வழக்குகளும் திருவள்ளூரில் 105 வழக்குகளும், திருநல்வேலியில் 109 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. கோவையில் 114 வழக்குகள், மதுரையில் 134 வழக்குகள் திருச்சியில் மற்றும் சேலத்தில் 44 வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 2,372 பேர் மீது 2,176 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.