வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (07/11/2018)

`தி.மு.கவில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுங்குங்கள்!’ - அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை

`தி.மு.கவில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுங்குங்கள்!’ - அ.தி.மு.கவினருக்கு அமைச்சர் தங்கமணி அறிவுரை

''தி.மு.க-வில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுக்குங்கள். கிராமம்தோறும் இரட்டை இலை சின்னம் வரைய சுவர் பிடியுங்கள்'' என்று தொண்டர்களுக்கு அமைச்சர் தங்கமணி அறிவுறுத்தியுள்ளார். 

அமைச்சர் தங்கமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், நிலோஃபர் கபில் மற்றும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

அமைச்சர் தங்கமணி பேசுகையில், ``தி.மு.க-வுடன் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க டி.டி.வி.தினகரன் திட்டம் போட்டுள்ளார். ஆட்சி, கட்சியைக் கைப்பற்ற துரோகியும் எதிரியும் சேர்ந்துவிட்டனர். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.கவோடு தினகரன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். லண்டனில் தினகரன் ரூ.1000 கோடிக்கு ஹோட்டல் வாங்கினார். அந்நியச் செலாவணி மோசடியில் ஒன்றரை ஆண்டு சிறைக்குச் சென்றார். இடைத்தேர்தல், ஒரு மினி பொதுத் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது. தி.மு.க-வில் இருக்கும் உறவினர்களை வெறுத்து ஒதுக்கி வையுங்கள். நமக்கும் கட்சிதான் முக்கியம். அ.தி.மு.க வெற்றிபெறப் பாடுபடுங்கள். சுவர்களில் மற்ற கட்சி சின்னங்களைவிட இரட்டை இலை சின்னம் அதிகம் இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இப்போதே சின்னம் வரைய நிறைய இடங்களைப் பிடித்துவையுங்கள். வேட்பாளரைப் பார்க்காதீர்கள், சின்னத்தைப் பாருங்கள்’’ என்றார். 

அமைச்சர் கே.சி.வீரமணி, ``வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய மூன்று தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி தினகரன் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். இம்மாவட்டத்தில் கே.வி.குப்பம், அரக்கோணம் எம்.எல்.ஏ-க்களை இழுக்கவும் தினகரன் பேரம் பேசினார். மற்றவர்களைப் போல இல்லாமல், இரு எம்.எல்.ஏ-க்களும் கட்சிதான் பெரியது என்றுக் கூறி டி.டி.வி.தினகரன் பக்கம் செல்லவில்லை'' என்றார்.