வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (07/11/2018)

கடைசி தொடர்பு:21:38 (07/11/2018)

`நடிகர் விஜய், தயாரிப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை!’ - அமைச்சர் சி.வி.சண்முகம் #Sarkar

`சர்கார்' திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும் திரைப்படம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். திருப்போரூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது ‘ஒரு தீவிரவாதியைப்போல மக்கள் மீது வன்முறையை நடிகர் விஜய் தூண்டுகிறார்’ எனச் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்ட மன்றத் தொகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரலாம் என்பதால் தேர்தல் பரபரப்பு 20 தொகுதிகளிலும் தொற்றிக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளராக சி.வி.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்போரூர் தொகுதியின் இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்போரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா உள்ளிட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “தினந்தோறும் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசிப்பேசி பழக்கப்பட்டவர்கள் மக்களிடத்திலும் தன் நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சர்கார் திரைப்படத்தின் மூலமாக ஒரு நடிகர் மூன்று மணி நேரத்தில் முதலமைச்சர் ஆவேன் என்று சொல்லிக்கொண்டு கற்பனை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். யாரோ ஒருவரின் கதையைத் திருடி, யாருடைய பணத்திலோ நடித்துவிட்டு, தியேட்டர்களில் அதிக கட்டணத்தை வசூலிக்கும் நடிகர் ஒருவர் அரசாங்கத்தை விமர்சிக்கிறார்.

சினிமா என்ற போர்வையில் அரசின் திட்டங்களின் பொருட்களை எரிப்பதுபோல காட்சிப்படுத்தி ஒரு தீவிரவாதியைப்போல மக்களை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளார். அந்தத் திரைப்படத்தைத் தயாரித்தவர், அந்தப் படத்தில் உத்தமர்போல நடித்தவர், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரின் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க சட்டத்துறை மூலம் தமிழக அரசுக்கு வலியுறுத்துவேன். தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் செயல்படக் கூடாது என வெளிநாட்டு சதிக்கூட்டம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களோடு ஒரு நடிகர் வெளிநாட்டு சதியாளர்களின் தொடர்பில் உள்ளார் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க