வெளியிடப்பட்ட நேரம்: 02:08 (08/11/2018)

கடைசி தொடர்பு:02:08 (08/11/2018)

`சாமி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பு' - காஞ்சிபுரம் கோவில் நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு!

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிக்கப்பட்டதாக 2000க்கும் மேற்பட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது பெரும் விவாதப் பொருளாகிவிட்டது.

காஞ்சிபுரம் கோவில்

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தீர்ப்பு தொடர்பான மீம்ஸ்கள் பதியப்பட்டு வருகின்றன. தீபாவளியன்று, தமிழக மக்கள் நாள் முழுவதும் ‘வெடிவெடித்து’ உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடி இருக்கிறார்கள். மக்களிடம் ஆதரவு இல்லாத இந்த தீர்ப்பு குறித்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பக்தர் ஒருவர் நம்மிடையே பேசினார். “தீபாவளியென்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது பட்டாசுதான். ஒவ்வொரு வீட்டிலும் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து படைத்து விட்டு பட்டாசுதான் வெடிப்பார்கள். அதிகாலையில் எல்லோரும் ஒரே நேரத்தில் எழுந்து பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது எப்படிச் சாத்தியமாகும்? சில வீடுகளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அந்த வேலைகளைப் பாதியில் விட்டுவிட்டு பட்டாசு வெடிக்க முடியுமா? தீபாவளியன்று நாள் முழுவதும் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. இரண்டு மணிநேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் ஒரு உத்தரவைப் போடுகிறார்கள். ‘இத்தனை மணிக்குத்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லிவிட்டார்’ என பத்து வயது சிறுவர்களுக்கு எடுத்துச் சொன்னால்  புரியுமா? 

காமாட்சி அம்மன் கோயிலில் 7 மணிக்கு மேல் அம்பாள் புறப்படும்போது பட்டாசு வெடித்ததாகச் சொல்கிறார்கள். அம்பாள் புறப்படும் போது பட்டாசு வெடிப்பது வழக்கமான ஒன்று. அதைத் தீபாவளியோடு ஒப்பிட முடியாது. நீதிமன்ற உத்தரவை மீறியதாகத் தமிழகம் முழுவதும் சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் விதிகளை மீறி பட்டாசு வெடித்த  அரசியல் பிரமுகர்கள், அதிகார வர்க்கத்தினர் மீது எந்த சட்டம் பாயவில்லை. நீதிமன்ற உத்தரவை மீறி தீபாவளியன்று லட்சக்கணக்கானோர் பட்டாசு வெடித்துக் கொண்டேதான் இருந்தார்கள். நாள் முழுவதுமே பட்டாசு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அதில் ஒரு சிலரின் மீது மட்டும் ஏன் இந்த பாகுபாடு? இத்தனை மணிக்குத்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இந்தியா முழுவதுமே சிறைச்சாலைதான் இருக்கும். ஒட்டு மொத்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக்க தீர்ப்பு திருத்தி எழுதப்பட வேண்டும்” என கொந்தளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க