வெளியிடப்பட்ட நேரம்: 04:03 (08/11/2018)

கடைசி தொடர்பு:10:03 (08/11/2018)

`மழை அவ்வப்போது வருவதால் காய்ச்சல்' - சுகாதாரத் துறை செயலாளர்!

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் இறந்துள்ளனர். 'உடல் பருமன், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருங்கள்' என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

டெங்கு

வேலூரில் இன்று, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்தார். அதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், ‘‘தொற்று நோய்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. அக்டோபர் மாதத்தில் காய்ச்சல் வரக் காரணமான நோய்கள் அதிகரித்தது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் காய்ச்சல் படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை உள்பட அனைத்துத் துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களிடம் கை கழுவும் பழக்கம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தொற்றுப் பகுதிகள் சுத்தம்செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 416 பெரிய வாகனங்கள், 770 ஜீப் மூலம் நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 1200 காய்ச்சல் முகாம்கள், அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குத் தாமதமாக வரக்கூடாது. போலி டாக்டர்களிடம் செல்லக் கூடாது. காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. அதே நேரத்தில், கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. தமிழகத்தில், கடந்த ஆண்டு 3,800 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு, ஜனவரி முதல் இதுவரை 1,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 259 பேர் காய்ச்சலுக்கு இறந்துள்ளனர். இந்தியா முழுவதும் 8,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. இறப்பைத் தவிர்க்க முடியும். உடல் பருமன், ஆஸ்துமா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். டாக்டர்கள் கண்காணிப்பில் இருங்கள். நோய்த் தொற்று பரவாமல் இருக்க தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த வாரம் முதல் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இறங்குமுகமாகியுள்ளது. 35 சதவிகிதம் குறைந்துள்ளது. மழை அவ்வப்போது வருவதால் காய்ச்சல் வருகிறது" என்றார்.