`வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம்' - தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை! | Ramadas demand the new ministry for Tamil people

வெளியிடப்பட்ட நேரம்: 07:12 (08/11/2018)

கடைசி தொடர்பு:08:36 (08/11/2018)

`வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு புதிய அமைச்சகம்' - தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!

"வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் காக்க தமிழகத்தில் புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். "வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும், அவர்களின் உயிர் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமதாஸ்

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ``இந்தியாவில் உள்ள குடும்பங்களைக் காப்பாற்றுவதற்காக வளைகுடா நாடுகளுக்கு பணிக்குச் செல்லும் இந்தியத் தொழிலாளர்கள், அங்கு அனுபவித்துவரும் கொடுமைகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளில் பணிக்கு சென்ற இந்தியத் தொழிலாளர்களில் 24 ஆயிரத்து 570 பேர் கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழந்திருக்கின்றனர்.

2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 10 ஆயிரத்து 416 பேர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சமாக பஹ்ரைனில் ஆயிரத்து 317 பேர் இறந்துள்ளனர். சராசரியாகப் பார்த்தால், வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர் உயிரிழக்கின்றனர் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள்

சவுதி அரேபியா உள்ளிட்ட 6 வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 5.49 கோடிதான். இது, இந்திய மக்கள்தொகையில்   25-ல் ஒரு பங்கு மட்டுமே. தமிழகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு மட்டுமே. அவ்வளவு சிறிய நாடுகளில் 6 ஆண்டுகளில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழப்பதை சாதாரணமான ஒன்றாகக் கருதி கடந்து சென்றுவிட முடியாது. மேற்குறிப்பிட்ட நாடுகளில், கத்தார் மட்டுமே உயிரிழப்புக்கான காரணங்களைத் தெரிவித்திருக்கிறது. 80 சதவிகிதம் இயற்கை மரணங்கள் என்றும் 14 சதவிகிதம்  விபத்து மரணங்கள் என்றும், 6 சதவிகிதம்  தற்கொலைகள் என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது. விபத்து, தற்கொலைகள் சார்ந்த புள்ளிவிவரங்களும் ஐயத்தையே அளிக்கின்றன.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களில், கேரளத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.  தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். வளைகுடா நாடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் அனைத்தையும் ஐயத்திற்கிடமானவை என்று குற்றம் சாட்ட முடியாது. ஆனால், தூதரகங்கள் தங்களின் கடமையைச் செய்வதில் தோல்வியடைந்துவிட்டதே இதற்குக் காரணம்.

வளைகுடா நாடுகளில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை உடனடியாகத் தீர்ப்பதன்மூலம் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரில், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதால், அங்குள்ள தூதரங்களில் தென்னிந்திய மொழி தெரிந்த அதிகாரிகளை அமர்த்த வேண்டும்.

ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வெளியுறவு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்துக்குப் புத்துயிரூட்ட வேண்டும். அதேபோல, தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக புதிய அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க