வெளியிடப்பட்ட நேரம்: 06:23 (08/11/2018)

கடைசி தொடர்பு:08:27 (08/11/2018)

`விஜய்யின் அரசியல் ஆசை அவரது பேச்சிலேயே தெரிகிறது' - பழ.கருப்பையா பகிரும் சீக்ரெட்ஸ்!

"விஜய், நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பது உறுதி. அது, அவரிடம் பேசும்போது அவர் பேச்சிலேயே பலமுறை வெளிப்பட்டது" என்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில்  பழ.கருப்பையா தெரிவித்தார்.

பழ.கருப்பையா

" 'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும்" என்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, அன்பழகன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார், விஜய்யின்  'சர்கார்' படத்தின் வில்லன்களில் ஒருவராக நடித்த மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா.

பழ.கருப்பையா செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டி ஒன்றில், "தணிக்கைக் குழு அனுமதிக்குப் பிறகுதான் 'சர்க்கார்' படம் வெளி வந்திருக்கிறது. ஏற்கெனவே, படத்தில் சொல்லப்பட்ட வசனங்கள் அனைத்தும் அப்படியே வெளிவரவில்லை. அதில், ஆளும் அ.தி.மு.க கட்சி பற்றி மட்டுமல்ல, எதிர்க்கட்சியான தி.மு.க பற்றிய வசனங்கள் பலவும் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக,  இந்தி எதிர்ப்பு தொடர்பாகக் கேலிசெய்யும் வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டது. அதை சென்சார் போர்டு புரிந்துகொண்டுதான் நீக்கியிருக்கியது.

சர்காரில் பழ கருப்பையா

அமைச்சர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வசனங்களை நீக்கவேண்டிய அவசியமில்லை. படம் முழுவதும் நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டது. இயக்குநர், படத்தில் எந்தக் கட்சிக்கும் சார்பாக இல்லை. அமைச்சர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அதில் விஷயம் இருக்கிறது என்று எல்லோரும் பார்ப்பார்கள். அமைச்சர்கள் எதிர்ப்பது, வெற்றிபெற வேண்டிய படத்தை பெருவெற்றியாக மாற்ற மட்டுமே உதவும். கல்வி போன்றவைதான் இலவசமாகக் கொடுக்க வேண்டும். இலவசங்கள் அன்றைய தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும், நிரந்தர தீர்வைத் தராது. உங்களிடம் வளர்ச்சிக்கான திட்டம் இல்லை. அதை சுட்டிக்காட்டினால் எதிர்ப்பது சரியல்ல. விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பது உறுதி. அது, அவரிடம் பேசும்போது அவர் பேச்சிலேயே பலமுறை வெளிப்பட்டது. அவரைக் கொண்டாடும் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், எப்போது வருவார் என்று சொல்ல முடியாது" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க