தேர்வுத்தாள் பேப்பர் முறைகேடு: அழகப்பா பல்கலைக்கழக அதிகாரி ராஜினாமா! | alagappa university examination paper malpractice

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:13:05 (08/11/2018)

தேர்வுத்தாள் பேப்பர் முறைகேடு: அழகப்பா பல்கலைக்கழக அதிகாரி ராஜினாமா!

தேர்வுத்தாள் பேப்பர் முறைகேடு: அழகப்பா பல்கலைக்கழக அதிகாரி ராஜினாமா!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதாத பாட பேப்பர்கள் தனிநபருக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தற்போது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``மாணவர்கள் எழுதிய தேர்வு பேப்பர்கள் அனைத்தும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு டி.என்.பி.எல் பேப்பர் மில்லுக்கு விதிகளுக்கு உட்பட்டு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேர்வு எழுதிய பழைய பேப்பர்கள் லாரிகள் மூலம் கரூர் பேப்பர் மில்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் குப்பையோடு தேர்வு எழுதாத பேப்பர்களை அனுப்பி விடலாம் என்று திட்டமிட்டவர்களின் சதி முறியடிக்கப்பட்டது. இந்த பேப்பர்கள் இப்பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்குப் பல லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட இருந்தது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த விஷயம் வெளியில் தெரியாமல் மூடி மறைப்பதற்காக, துணைவேந்தர் `காந்தி ஜெயந்தி அன்று நள்ளிரவு வரை சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினார். பிறகு தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான சக்திவேலுவிடம் எந்தச் சிக்கலும் வராதபடி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார்.

இதற்கு முன்பு தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த குருமல்லேஸ்பிரபு தற்போது பதிவாளராக இருக்கிறார். இவருடைய பதவிக்காலத்தில் இதுபோன்ற பேப்பர்கள் விற்பனையானதன் தொடர்ச்சிதான் இது என்றும், சிண்டிகேட் உறுப்பினர்கள் வரை இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கிறது. எனவே பல்கலைக்கழக ஊழியர்கள் வரைக்கும் விசாரிக்கப்படவேண்டும் என்றும் கூறி புகார் மனு ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியிருக்கிறது பல்கலைக்கழகப் பாதுகாப்புக் குழு. லஞ்ச ஒழிப்புத்துறையும் தேர்வு எழுதாத பேப்பர் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரணைக்கு எடுத்திருக்கிறது" என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள்.

அழகப்பா பல்கலை

"மேலும் 'தேர்வு எழுதாத பேப்பர் விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் இருப்பது யார்? ஏன் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்காமல் வேறு துறைக்கு மாற்றினார்கள்? துணைவேந்தர் ராஜேந்திரன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காத்திருப்பதன் மர்மம் என்ன?' போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை. சக்திவேலுக்குத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பதவி வாங்கிக் கொடுத்ததே தற்போது பதிவாளராக இருக்கும் குருமல்லேஸ்பிரபுதான். எனவே, இவர்களுக்குத் தெரியாமல் இதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை" என்கிறது பல்கலைக்கழக ஊழியர்கள் வட்டாரம்.

இந்தப் புகார் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த சக்திவேலுவிடம் பேசினோம்.

``தேர்வு எழுதிய பேப்பர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கரூரில் இருக்கும் அரசு காகித ஆலைக்கு அனுப்புவது வழக்கம். அதுமாதிரிதான் அந்த பேப்பர்கள் சட்டவிதிகளின்படி முறையாக அனுப்பப்பட்டது. தேர்வு எழுதாத பேப்பர்கள் எப்படி அதில் கலந்து வந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவியை என் குடும்பச் சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்திருக்கிறேன். என்னை யாரும் மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கவில்லை" என்றார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தேர்வுத் தாள் விற்பனை குறித்து  பேசினோம். "அழகப்பா பல்கலைக்கழகம் உலகஅளவில் இடம் பெற்றிருக்கிறது. ஒருசிலர் செய்த தவறுகளால் பல்கலைக்கழகத்திற்கு அவமானமும், கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்கிறது. மற்ற தகவல்களை நான் உங்களிடம் நேரில் பேசுகிறேன்" என்றார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குருமல்லேஸ்பிரபு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் பேசினோம். ``நான் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தபோது தேர்வு எழுதிய பேப்பர்கள் முறைப்படி அனுமதி பெற்று மதுரை, சிவகங்கை போன்ற ஏரியாக்களில் விலைப்புள்ளிப் பட்டியல் பெற்று அதன் பிறகுதான் அந்த பேப்பர்களை விற்பனை செய்திருக்கிறோம். ஆனால் தற்போது எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் சிவகங்கையைச் சேர்ந்த முருகப்பா நிறுவனத்துக்கு பேப்பர்களை விற்பனை செய்திருக்கிறார்கள்" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்