வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (08/11/2018)

கொடியேற்றத்துடன் தொடங்கியது கந்தசஷ்டி! - திருச்செந்தூர், திருப்போரூரில் குவிந்த பக்தர்கள்

கந்தசஷ்டி என்பதால்,  தமிழகம் முழுவதிலும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலிலும், திருப்போரூர் கந்தசாமி கோயிலிலும் கந்தசஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருப்போரூர் கந்தசஷ்டி கொடியேற்றம்

கடலில் திருச்செந்தூரிலும், நிலத்தில் திருப்பரங்குன்றத்திலும், விண்ணில் திருப்போரூரிலும் என மூன்று இடங்களில் முருகன் போர் புரிந்ததாக ஆன்மிக வரலாறு கூறுகிறது. தாரகாசூரனை விண்ணில் வதம்செய்த இடம்  திருப்போரூர் என்பதால், இங்கும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். திருப்போரூரில் ஆறு நாள்களும் ஆறு விதமான பொம்மைகள் வீதியுலா வரும். முதல் ஐந்து சூரர்களை வீரபாகுவும், ஆறாவது சூரனான தாரகாசூரனை முருகனும் வதம் செய்வார்கள். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி கோலாகலமாகத் தொடங்கியது. இதில், காஞ்சிபுரம் எம்.பி. மரகதரம் குமரவேல், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். திருப்போரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருவதால், திருப்போரூர் தொகுதியில் வெற்றிபெற முருகனிடம் வேண்டிக்கொண்டதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

திருப்போரூ7் கந்தசஷ்டி

கந்தசஷ்டி நடைபெறும் 6 நாள்களும் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். ஆறாம் நாளான 13-ம் தேதி, முருகன் குதிரை வாகனத்தில் அமர்ந்து சூரசம்ஹாரம் செய்யும் உற்சவம் நடைபெற உள்ளது. அடுத்த நாளான 14-ம் தேதி மாலை 6 மணி முதல் 7.30 வரை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.  சூர அவதாரத்துக்காகக் கடந்த வருடம் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாவுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. இந்த வருடம், மாவட்டம் முழுக்க விடுமுறை அளிக்க வேண்டும் என முருக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளிலேயே பக்தர்கள் குவிந்தனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இன்று (08.11.18) காலை  யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு  விஸ்வரூப தரிசனம்  நடைபெற்றது. அடுத்து,  உதயமார்த்தாண்ட பூஜை நடைபெற்றது.  அடுத்து, உற்சவமூர்த்தியான சுவாமி ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்குப் புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  பின்னர், யாகசாலை பூஜைகள் தொடங்கியது. மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்திலும் நடைபெறும். 

சஷ்டி விரதம்  மேற்கொள்ளும் பக்தர்கள், விழாவின்  முதல் நாளான இன்று, யாகசாலை பூஜையில் கலந்துகொண்டு விரதத்தைத்  தொடங்குவார்கள். அதன்படி, அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி, திருக்கோயில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றி அங்கப்பிரதட்சனம் செய்தனர். விழாவின் முதல் நாளிலேயே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. யாகசாலை பூஜைகளில் கலந்து கொள்வதற்காக, நேற்றே கிரிப்பிரகார மண்டபம், சஷ்டி மண்டபம், இடும்பன் மண்டங்களில் பக்தர்கள் தங்கினர். திருவிழாவின் 2-ம் நாளான 9-ம் தேதி  முதல் 5-ம் நாளான 12-ம் தேதி  வரை  தினமும் அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை தொடர்ந்து மற்ற காலங்களில் பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.

திருவிழாவின் 6-ம் நாளான 13-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை  நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக கடற்கரைக்கு எழுந்தருளல்  நடைபெறும். தொடர்ந்து, கடற்கரையில் சம்ஹாரம் நடைபெறும். திருவிழாவின் 7-ம் நாளான 14-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று, 5 மணிக்கு அம்பாள் தபசுக்காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சுவாமி அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும்.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, வரும் 13-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல்,  வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகைதருவார்கள். பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க