வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:12:05 (08/11/2018)

`பலருக்கு குளிர்விட்டுப்போச்சு!' - 'சர்காரை' சாடும் அமைச்சர் ஜெயக்குமார்

‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் பலருக்கு குளிர்விட்டுப் போய்விட்டது’ என அமைச்சர் ஜெயக்குமார் 'சர்கார்' படத்தை விமர்சித்துள்ளார். 

ஜெயகுமார்

வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்துக்கு தமிழக அமைச்சர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலிசெலுத்தினார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “என் உதவியாளர் மறைவு தாங்க முடியாத துயரம். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழுக்கு வீரர் முக்கியம் என்பதை எடுத்துரைத்த வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அரசு சார்பில் அஞ்சலிசெலுத்தப்பட்டது. 

ஜெயலலிதா இல்லாததால் பலருக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. அவர் உயிருடன் இருந்திருந்தால், இதுபோன்ற படங்களை எடுக்க முடியுமா? சமுதாயத்தின் கருத்துகளைப் பிரதிபலிப்பதாகப் படம் எடுத்தால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம். ஆனால், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதற்காக மற்றவர்களின் உணர்வுகளை மிதித்து, தமிழக மக்களின் உணர்வுகளைச் சிதைத்து, தன்னை நிலை நிறுத்த நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதுபோல ஒரு திரைப்படம் என்பது மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக்கூறும் சாதனமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் எம்.ஜி.ஆர் பல படங்களில் நடித்தார். அவரின் படங்களில் ஏதேனும் ஒன்றின் மீதாவது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளதா. அவரைப்போல படம் நடித்து, அவரைப் போலவே ஆக வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ஒருவரே. அவரைபோல யாரும் ஆக முடியாது. அவர்கள் என்னதான் அழுது புரண்டாலும் அவர்களுக்கு தலைவருக்கான அங்கீகாரத்தை மக்கள் அளிக்க மாட்டார்கள். 

சமுதாயத்தை வீணடிக்கும் வகையில் படத்தில் கருத்துகள் இருந்தால், அந்த படக்குழுவினர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எங்களைப் பொறுத்தவரை எதற்காக ஜெயலலிதாவின் இயற்பெயரை இந்தப் படத்தில் கொண்டுவர வேண்டும். உலகில் எவ்வளவு பெயர்கள் உள்ளன. இருந்தாலும், இந்தப் பெயரை வைத்ததால் இதை இழிவுப்படுத்தும் செயலாகத்தான் கருத முடியும். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு எடுக்கும் முடிவுகளை மக்கள்தான் அங்கீகரிக்க வேண்டும். மக்கள்தான் விமர்சனக் குழுவினர். ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் நல்ல முடிவையே தருவார்கள். அ.தி.மு.க ., அ.ம.மு.க இணைவது கனவில்கூட முடியாத விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.